சினிமா, சீரியல்களின் படப்பிடிப்புகள் நாளை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
படப்பிடிப்புத் தளங்களில் முறையான பாதுகாப்பு உபகரணங்களும், ஆம்புலன்ஸ்களையும் வைத்தே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என்று திரைப்படக் கலைஞர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான சிறப்புக் கூட்டத்தை முன்னிட்டு, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. பெப்சி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் நாளை காலை கமலா திரையரங்கில் கூடுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது. அப்போதே, படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன. இப்போது ‘சர்தார் 2’விலும் உயிரிழப்பு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தினரும் பங்கேற்கின்றனர். நாளை நடைபெறும் கூட்டம் குறித்து பெப்சி தரப்பில் தெரிவித்துள்ளதாவது,
‘சர்தார் 2’ படப்பிடிப்பில் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனமான பெப்சியின் செயற்குழுகூட்டம் கடந்த 19ம் தேதி நடந்தது. அதில் திரைப்பட தொழிலாளர்கள், கலைஞர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளைத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். இது குறித்து பெப்சி தரப்பில் விசாரிக்கையில்…
”கடந்த 17ம் தேதி அன்று நடந்த ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நடந்த விபத்தில் தென்னிந்திய திரைப்பட மற்றும் டி.வி. சண்டை இயக்குநர்கள் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் அகலா மரணமடைந்த துயரமான செய்தியை அறிவோம். படப்பிடிப்பில் பணிபுரியும் போது உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகள் மற்றும் படப்பிடிப்பு நிலையங்களில் ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பல முறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம். சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை சிறிதளவும் பின்பற்றுவதில்லை.
மேலும் படப்பிடிப்பில் பணிபுரியும் திரைப்பட கலைஞர்கள், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிவதால் பல உறுப்பினர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே உயிரிழக்கிற அபாயகரமான சூழ்நிலையில் உறுப்பினர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து உறுப்பினர்களையும் இக்கூட்டத்திற்கு வரவழைத்து அனைத்து பாதுகாப்பு விதிகளையும் தெரிவிக்க உள்ளனர்.” என்றனர்
நடிகர்களின் சம்பள விவகாரம், படப்பிடிப்பு செலவுகள் அதிகரிப்பு, நடிகர்களின் உதவியாளரகளுக்கான செலவுகள் போன்றவை குறித்து கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் சங்கமும், நடிகர் சங்கமும் அடிக்கடி பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழலில், தொழிலாளர்களின்… பாதுகாப்பு செலவுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் நாளை விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிப்புணர்வு கூட்டம் குறித்து தயாரிப்பாளர் சங்கம் என்ன சொல்லப் போகிறது என்பதும் நாளை தெரியவரும் என்கின்றனர்.