மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில், பல அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தாலும், மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளின் மாநிலங்களான பீகாருக்கு ரூ.26,000 கோடியில் சாலைத்திட்டங்கள், ரூ.11,500 கோடியில் வெள்ளம் தடுப்பு திட்டங்கள் மற்றும் ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி என சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டிருப்பது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
அதோடு, மாநில சிறப்பு அந்தஸ்து கேட்ட கூட்டணி கட்சிகளின் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கி அவர்களை பா.ஜ.க சமாதானப்படுத்தியிருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடின. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இடம்பெறாததும், ரயில்வே, பாதுகாப்புத் துறை, விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லாதது எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் மெதுவாகத் தெரிந்துகொள்வீர்கள் என ஆளும் என்.டி.ஏ கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் நேற்று ஊடகத்திடம் பேசிய நிதிஷ் குமார், “சிறப்பு அந்தஸ்து குறித்து தொடர்ந்து மத்திய அரசிடம் பேசிவருகிறேன். எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்குங்கள் என்று அவர்களிடம் சொன்னேன். அதன் தொடர்ச்சியாக, நிறைய நிவாரணங்களை அறிவித்திருக்கிறார்கள்.
சிறப்பு அந்தஸ்து தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, சிறப்பு அந்தஸ்து வழங்குவது முன்பே நீக்கப்பட்டுவிட்டதாக நிறைய பேர் கூறினார்கள். அதற்குப் பதிலாக பீகாருக்கு உதவ நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அனைத்து விஷயங்களையும் மெதுவாகத் தெரிந்துகொள்வீர்கள்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88