புதுடெல்லி: “இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள்” என்று செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வில் இன்று (ஜூலை 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களிடம், “இந்த வழக்கில் ரூ. 67 கோடி பணப்பரிவர்த்தனை நடந்ததுக்கு ஆதாரமாக சொல்லப்படும் ஆவணங்கள் என்ன?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ்” என்றனர் வழக்கறிஞர்கள். அப்போது, “இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென் டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது. அது குறித்து உங்கள் பதில் என்ன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது” என வாதிட்டனர். அதற்கு நீதிபதிகள், “நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள். நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி. அதற்கு நாங்கள் உங்களிடம் நேரடியான சாதாரண பதிலைத்தான் எதிர்பார்க்கிறோம். சுற்றி வளைக்காமல் பதில் சொல்ல வேண்டும். தற்போது எல்லாம் வழக்கறிஞர்களிடம் நாங்கள் கேள்வி கேட்டால் அதனை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
பென் டிரைவில் இருப்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்கள் தான் பதில் கூறவேண்டும் என்பதை நாங்களும் அறிவோம். நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. எனவே, தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம். இன்று பதில் இல்லை என்றால், நாளை பதிலோடு வாருங்கள், நாளைக்கு வழக்கை தள்ளி வைக்கிறோம்” என்று கூறி வழக்கை வியாழக்கிழமை ஒத்திவைத்தனர்.