புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பார்த்து அதன் விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார்.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரசுக்கும், அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் ஆளுநர் உத்தரவுப்படி ரேஷன் கடைகள் மூடப்பட்டன. ரேஷன் கடைகளில் வழங்கி வந்த இலவச அரிசிக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.
அரசியல் கட்சிகளும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலை வெளிசந்தையில் கடுமையாக உயர்ந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ரங்கசாமியிடம், ரேஷன் கடைகளை எப்போது திறப்பீர்கள் என பெண்கள் நேரடியாகவே கேள்வி எழுப்பினர். அப்போது, விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.
தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையிலும் பிரச்சாரத்தின் போது முதல்வர் ரங்கசாமி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இதையடுத்து, கடந்த 7 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அனுமதியும் அளித்துள்ளார். இதையடுத்து ரேஷன் கடைகளை திறந்து மீண்டும் இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
புதுவையில் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் இலவசமாகவே கடந்த காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சிவப்பு ரேஷன்கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு கிலோ ரூ.1 விலையில் 20 கிலோ அரிசியும் வழங்கப்பட உள்ளது.
அத்துடன் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமி, இன்று (ஜூலை 24) வீட்டில் டென்னிஸ் விளையாடிவிட்டு அதே உடையில் ஆரோவில்லில் டீ சாப்பிடச் சென்றார். அதன்பின்பு அங்கிருந்து புதுச்சேரி திரும்பும்போது புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான சின்னமுதலியார் சாவடியிலுள்ள ரேஷன்கடைக்கு முதல்வர் சென்றார்.
அங்கிருந்த ஊழியர்களிடம், ரேஷனில் வழங்கப்படும் அரிசி, பருப்பு ஆகியவற்றை கேட்டுப் பெற்று அதன் தரத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, ரேஷன்கடைகளில் மாதந்தோறும் என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பது உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தார்.
இதுபற்றி உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “புதுவையில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க டெண்டர் விடப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட உள்ளது. அத்துடன் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்ளும் ரேஷன் கடைகள் மூலமாக தரப்பட உள்ளது. இதற்காகவே தமிழக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பார்த்து விவரத்தை நேரடியாக கேட்டறிந்தார் முதல்வர்” என்றனர்.