நபார்டு வங்கியில் கடன் பெறும் விவசாயிகளை உரம் வாங்க நிர்பந்திக்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நபார்டு வங்கி மூலமாக வட்டியில்லா கடன் பெறும் விவசாயிகளை இயற்கை உரம் வாங்கும்படி நிர்பந்திக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நபார்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் வசதியைப் பெறும் விவசாயிகள் டான்ஃபெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகக்கூறி கடலூரைச் சேர்ந்த விவசாயி ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வாங்கிய அந்த இயற்கை உரங்களால் எந்த பயனும் இல்லை. இயற்கை உரம் என்ற பெயரில் வெறும் மண்ணைத்தான் விற்பனை செய்கின்றனர். இதுதொடர்பாக உள்ளூர் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நகராட்சிகள், பேரூராட்சிகள் உற்பத்தி செய்யும் இந்த இயற்கை உரங்கள் டன்னுக்கு ரூ.1000 முதல் 3000 வரை மட்டுமே விற்கப்படும் சூழலில் டான்ஃபெட் மூலம் விற்கப்படும் உரங்கள் டன்னுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் ரூபாய் கொள்ளை லாபத்துக்கு விற்கப்படுகிறது. தற்போது இந்த இயற்கை உரம் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே சிறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இயற்கை உரங்களை நியாயமான விலைக்கு விற்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நபார்டு மூலமாக விவசாயக் கடன் பெறும் விவசாயிகளிடம் இயற்கை உரம் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது, என அறிவுறுத்த வேண்டும். அத்துடன் இதுதொடர்பான டெண்டரை இறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும்,” என கோரியிருந்தார்.



இந்த வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம். புருஷோத்தமன் ஆஜராகி, இயற்கை உரம் என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது, என வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.