அமராவதி: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கடந்த பிப்ரவரியில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ரூ.2.86 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு பதவியேற்ற சந்திரபாபு நாயுடு அரசு, இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கலை செப்டம்பர் வரை தள்ளி வைத்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து பட்ஜெட் தாக்கல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கூறியதாவது: கடந்த ஜெகன் ஆட்சியில் நிர்வாகம் சரியில்லாததால் ஆந்திராவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை. இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தற்போது மத்திய பட்ஜெட்டில் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.15,000கோடி நிதி உதவி கிடைத்துள்ளது. அமராவதியை முந்தைய அரசு கைவிடாமல் இருந்திருந்தால், இப்போது நல்ல வளர்ச்சி அடைந்த தலைநகரமாக அது மாறியிருக்கும்.
கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியிலேயே 72 சதவீதம் வரை போலவரம் பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள 28 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஒய்எஸ். விவேகானந்த ரெட்டியை (ஜெகன்மோகனின் சித்தப்பா) யார் கொலைசெய்தார்கள் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.
கடந்த 5 ஆண்டுகளில் மணல்கொள்ளை, தரமற்ற மது விற்பனை போன்றவற்றில் ஜெகன் அரசு பல லட்சம் கோடி மோசடி செய்துள்ளது. இவை அனைத்தும் வெளியில் வரும். ஆந்திராவில் விரைவில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
பவன் கல்யாண் உறுதி: பேரவையில் துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது:
ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ஜனசேனா கட்சி எப்போதும் துணை நிற்கும். ஜெகன் ஆட்சியில் கஜானா காலியாகி விட்டது. அமராவதி, போலவரம் பணிகள் நின்று போயின. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போனது. ஆந்திராவில் தொழிற்சாலைகள் தொடங்க எவரும் முன்வரவில்லை. இருந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக அனுபவம் மிக்க முதல்வரான சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து பயணிப்போம். யாரும் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம். ஊழல், முறைகேடுகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம். நான் தவறு செய்தால் கூட என் மீது நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.