மென்லோ பார்க்: மெட்டா ஏஐ-யில் வெளியாகி உள்ள புதிய அம்சத்தை பகிர்ந்துள்ளார் மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்க். இதன் மூலம் பயனர்கள் தங்களது புகைப்படத்தை நிகழ் நேரத்தில் பல வகையில் தங்களின் கற்பனைக்கு ஏற்ப வகையில் மாற்ற முடியும். அதற்கு மெட்டா ஏஐ உதவுகிறது.
இந்த அம்சம் குறித்த அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டு மார்க் ஸூகர்பெர்க் டெமோ செய்துள்ளார். அதில் தனது படத்தை பல்வேறு வகையில் மிகவும் எளிதாக மெட்டா ஏஐ உதவியுடன் அவர் உருவாக்குகிறார். இதற்காக மெட்டா ஏஐ-யில் தனது புகைப்படத்தை அப்லோட் செய்கிறார். பின்னர் தனது கட்டளைக்கு ஏற்ப படங்களை உருவாக்க அதை பணிக்கிறார்.
அந்த வீடியோவில் ‘என்னை கிளாடியேட்டர் போல கற்பனை செய்’ என மார்க் சொல்கிறார். அந்த படத்தை மெட்டா ஏஐ உருவாக்கி தருகிறது. அதன் பின்னர் பல்வேறு விதமான படம் வேண்டும் என சொல்லி, அதனை பெறுகிறார். இப்படியாக அந்த வீடியோ நிறைவடைகிறது. இப்போதைக்கு இந்த அம்சம் அர்ஜென்டினா, சிலே, கொலம்பியா, ஈக்வடார், மெக்சிகோ, பெரு மற்றும் கேமரூன் போன்ற நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும். படிப்படியாக உலக அளவில் விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்டா ஏஐ: இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் ஆகியுள்ளது. இதனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.
பயனர்கள் இதைக் கொண்டு மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF உருவாக்க என பல பணிகளை செய்யலாம். இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தபடி மேற்கொள்ளலாம். கூகுள், மைக்ரோசாப்ட் வழங்கும் நிகழ்நேர சேர்ச் ரிசல்ட்களை பயனர்கள் இதில் பெற முடியும்.