தஞ்சாவூர் மாநகராட்சியின் 36-வது வார்டு கவுன்சிலர் கண்ணுக்கினியாள். அ.ம.மு.க-வைச் சேர்ந்த இவர், மேரீஸ்கார்னர் கீழ்ப்பாலம் பகுதியில் திடீரென சாலையில் நடுவே படுத்து உருண்டு மறியல் போராட்டம் செய்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளிட்ட பலர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணுக்கினியாள் கூறியதாவது, “36-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான பூக்காரத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சில மாதங்களாகவே பாதாள சாக்கடை பிரச்னை இருந்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் பூக்கார தெரு, பூக்கார முஸ்லிம் தெரு, மாதா கோவில் தெரு சாலைகளில் ஓடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் மக்கள், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் என்கிற முறையில் இது குறித்து பலமுறை நான் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களிடத்தில் தெரிவித்தேன்.
ஆனால் ஆணையர் உள்ளிட்ட யாரும் வந்து என்னவென்றுகூட பார்க்கவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலர் உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டனர். இதே போல் சாலைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அள்ளுவதற்கு குப்பை வண்டி வருவதில்லை. குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதையும் மாநகராட்சி கவனத்துக்கு எடுத்து சென்ற பிறகும் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டினர்.
முக்கியமாக குடிநீர் குழாயில் வரும் தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. அதையும் சரி செய்வதற்கான நடவடிக்கை இல்லை. இது போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகளைக்கூட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக செய்து கொடுக்கவில்லை. பொறுத்து பார்த்து, பொறுமை இழந்த நான், சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினேன்” என்று தெரிவித்தார். மாநகராட்சி தரப்பிலோ, விளம்பத்திற்காக இது போன்ற செயலை அவர் செய்திருப்பதாக கூறுகின்றனர்.