மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை

மதுரை: “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தென்மாவட்ட எம்பிக்கள், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன், நவாஸ் கனி, ஆகியோர் விமான போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: “கடந்த 2023 ஜனவரி 10-ல் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர செயல்பாடு வசதிக்கான அறிவிப்பின் முன்மொழிவை வெளியிட்டது. ஆனால் 19 மாதத்திற்கு பிறகும் 24 மணி நேர செயல்பாட்டை செயல்படுத்துவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மதுரை விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறனை பாதிக்கிறது. மேலும், தாமதமின்றி உத்தேச மாற்றங்களை நிறைவேற்றவேண்டும். 24 மணி நேர விமான நிலையமாக மாறுவது சர்வதேச இணைப்பை மேம்படுத்தும்.

விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்பாக அமையும். உள்ளூர் பொருளாதாரத்திற்கு உதவும். பயணிகளுக்கும் சிறந்த சேவையை உறுதி செய்யலாம். தேவையைக் கருதி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இணைப்பு, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.



சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானங்கள் குறைப்பு: சமீபத்தில் மதுரை- சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா விமானங்கள் குறைக்கப்பட்டன. இதனால் வர்த்தகம், குடும்ப இணைப்பு , சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேவைகளை கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கான விமான அலைவரிசைகளை மீண்டும் நிறுவ வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும். மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் நிலையில், பிற முக்கிய சர்வதேச இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

குறிப்பாக, துபாய், கோலாலம்பூருக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும். எங்கள் பிராந்தியத்திலுள்ள பயணிகள்,வணிகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தற்போதைய விமான அலைவரிசை போதுமானதாக இல்லை. மதுரையில் இருந்து முக்கிய இடங்களுக்கு கூடுதல் விமானங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மதுரை விமான நிலையத்தின் செயல்பாடுகள், அந்தஸ்தை மேம்படுத்துவதன் மூலம் மதிக்கப்படுவீர். இக்கடிதம் தொடர்பாக சாதகமான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என அதில் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.