புதுடெல்லி,
பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு திட்டங்களுக்காக ரூ.11 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதில், மாநிலங்களுக்கான வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூறியிருப்பதாவது:-
பல்வேறு மாநிலங்களில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 500 கோடி நிதி ஆதாரம் வழங்கும். இவற்றில், காசி-மெச்சி நதிகள் இணைப்பு மற்றும் 20 திட்டங்களும் அடங்கும்.
நாட்டுக்கு வெளியே உருவாகும் வெள்ளத்தால் பீகார் மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நேபாளத்தில் வெள்ள தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆகவே, பீகாருக்கு நிதியுதவி வழங்கப்படும்.
பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளால் உருவாகும் வெள்ளத்தால் அசாம் மாநிலம் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறது. வெள்ள தடுப்பு திட்டங்களில் அசாம் மாநிலத்துக்கும் உதவி அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு, இமாசலபிரதேசம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாநிலத்துக்கு மறுகட்டுமானம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக நிதியுதவி வழங்கப்படும். உத்தரகாண்ட் மாநிலம், மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
சிக்கிம் மாநிலம் சமீபத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, உத்தரகாண்ட், சிக்கிம் மாநிலங்களிலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது.