மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் சில அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்புகள் வெளியாகின. அதாவது, வீடு உள்ளிட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யும்போது, மூலதன ஆதாய வரிக்கு (Capital Gains Tax) வழங்கப்பட்டு வந்த இண்டக்ஸேஷன் பயன்கள் நீக்கப்பட்டுள்ளது.
இண்டக்ஸேஷன் (Indexation) என்றால் என்ன?
ஒரு சொத்தை விற்கும்போது, அதன் லாபத்தில் பணவீக்கத்தை நீக்கிவிட்டு மீதமுள்ள லாபத்துக்கு மட்டும் வரி செலுத்துவதற்கு இண்டக்ஸேஷன் உதவுகிறது.
உதாரணமாக, ஒரு வீட்டை 10 லட்சம் ரூபாய் விலைக்கு வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அதன் விலை சில ஆண்டுகள் கழித்து 30 லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கான லாபம் 20 லட்சம் ரூபாயாக இருக்கும். ஆனால், சொத்தின் விலை 30 லட்சம் ரூபாயாக உயர்ந்ததில் பணவீக்கத்தின் பங்கு அதிகம். ஆக, 20 லட்சம் ரூபாயில் பணவீக்கம் ஒரு பெரும் பகுதியை எடுத்துக்கொள்கிறது.
இப்போது இண்டக்ஸேஷன் மூலம் 20 லட்சம் ரூபாயில் பணவீக்கத்தை நீக்கிவிட்டு மீதமுள்ள லாபத்துக்கு மட்டும் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இதற்குதான் இண்டக்ஸேஷன் உதவுகிறது. ஆக, இண்டக்ஸேஷனால், நாம் செலுத்த வேண்டிய வரி குறைகிறது.
இந்த நிலையில்தான், 2024 பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கான இண்டக்ஸேஷனை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதனால், மொத்த லாபத்துக்கும் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.
மேலே எடுத்துக்கொண்ட உதாரணத்தில், 20 லட்சம் ரூபாய்க்கும் மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு இண்டக்ஸேஷனை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசு விளக்கம்..
இந்த நிலையில், இண்டக்ஸேஷன் நீக்கம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் சஞ்சீவ் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசியபோது, “2001-ம் ஆண்டு வரை வாங்கப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு இண்டக்ஸேஷன் பலன்கள் தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆக, 2001-ம் ஆண்டுக்குப் பின் வாங்கப்பட்ட ரியல் எஸ்டேட் சொத்துகளுக்கு மட்டும் இண்டக்ஸேஷன் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.