மதுரை: இன்று 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உலகநேரியில் 24.07.2004-ல் தொடங்கப்பட்டது. மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் மதுரை அமர்வில் விசாரிக் கப்படுகின்றன. நாட்டின் பசுமையான அமர்வு என மதுரை அமர்வு அழைக்கப்படுகிறது.
மரங்களுக்கு மத்தியில் அழகான உயரமான நவீன வசதிகள் நிரம்பிய நீதிமன்ற அரங்குகள், நிர்வாகக் கட்டிடம், தலைமை நீதிபதி, சக நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், நீதிபதிகளுக்கான உணவுக் கூடம், தங்கும் விடுதி, வழக்கறிஞர்கள் அறைகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம், காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருந்தகம், உணவகம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பது மதுரை அமர்வின் தனிச் சிறப்பு.
தொடக்கத்தில் இங்கு 3 நீதிபதிகள் மட்டுமே இருந்த நிலையில். தற்போது 20 பேர் உள்ளனர். மதுரை அமர்வில் வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்த ஜோதிமணி, நாகமுத்து, டி.ராஜா, ஆர்.எஸ்.ராமநாதன், சுகுணா, எஸ்.எஸ்.சுந்தர், நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, பி.புகழேந்தி, ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியாகவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிபதிகளாகத் தேர்வாகினர். இதுவரை 25-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாகத் தேர்வாகி உள்ளனர்.
மதுரை அமர்வு தொடங்கிய நாளிலிருந்து வழக்குகள் தாக்கலாவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த 20 ஆண்டுகளில் மதுரை அமர்வில் 12.30 லட்சம் வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. 77,751 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை அமர்வின் 20-வது ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தால் மதுரையில் வெகு விமரிசையாக நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, மதுரை அமர்வு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் நீதியை மட்டும் வழங்கவில்லை, சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியது என மகிழ்ச்சி தெரிவித்தார்.
சந்திரசூட் மேலும் பேசுகையில், தொடக்கத்தில் டில்லி உட்பட பல்வேறு இடங்களிலிருந்து வழக்கறிஞர்கள் மதுரை வந்து வாதாடினர். தற்போது மதுரை அமர்வு வழக்கறிஞர்களை வெளி மாநில நீதிமன்றங்களுக்கு அழைக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவு வழக்கறிஞர்கள் தங்களின் திறமையை வளர்த்துக்கொண்டுள்ளனர், என்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், மதுரை அமர்வு போல் உலகில் வேறு எங்கும் நீதிமன்ற கட்டிடம் இல்லை, என பெருமைபடத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யாகாந்த், பி.ஆர்.கவாய் ஆகியோர் பேசுகையில், மதுரை அமர்வின் அருமை, பெருமைகளைக் கேட்டு வியந்து நாங்கள் 20-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றோம். இங்கு வந்து பார்த்த பிறகு அது உண்மை என தெரிந்துக் கொண்டோம் என்றனர். இன்று 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாகத் திகழும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் செயல்பாட்டுக்கு வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.