அண்டை நாடான நேபாளத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். மலை நாடான நேபாளத்திற்கு செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. எனவே இந்தியர்கள் அதிக அளவு நேபாளம் செல்வது வழக்கம். இன்று நேபாள தலைநகரான காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா மையமான போகரா என்ற இடத்திற்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 19 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் பயணிகள் ஆவர். விமானம் ஓடுதளத்தில் இருந்து கிளம்பிய சில வினாடிகளில் விமானம் அப்படியே பைலட் கட்டுப்பாட்டை இழந்து மீண்டும் தரையில் மோதியது. தரையை வேகமாக உரசியபடி சென்ற விமானத்தில் தீப்பிடித்துக்கொண்டது.
இக்காட்சி சோசியல் மீடியாவில் அதிகம் பரவியிருக்கிறது. விமானத்தில் இருந்த பைலட் தவிர்த்து மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயத்துடன் தப்பிய பைலட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விமான விபத்துக்கான காரணம் தெரியவில்லை. நேபாளத்தில் சமீபகாலமாக விமான சேவை அதிகரித்து வருகிறது. ஆனால் போதிய பயிற்சி இல்லாத காரணத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் நேபாள விமானங்கள் தங்களது நாட்டிற்கு வர தடை விதித்துள்ளன. நேபாளம் முற்றிலும் மலைப்பகுதியாக இருப்பதால் நன்கு பயிற்சி பெற்ற பைலட்டிற்கே விமானங்களை இயக்குவது மிகவும் சவாலாக இருக்கும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் போகரா என்ற இடத்தில் தரையிறங்கியபோது ஒரு விமானம் விபத்துகுள்ளானது. இதில் 72 பேர் உயிரிழந்தனர். 1992-ம் ஆண்டு காட்மாண்டுவில் பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகி 167 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு தாய்லாந்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 113 பேர் உயிரிழந்தனர்.