Reliance Jio: வாடிக்கையாளர் குரலுக்கு செவி சாய்த்த ஜியோ… ரூ.349 பிளானில் அதிரடி மாற்றம்

Reliance Jio Prepaid Plans: ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில், கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று, வாட்டத்தில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில், தனது பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் எதிர்பாராத வகையில் மாற்றம் செய்துள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ வாடிக்கையாளர்களின் குறைக்கு செவிசாய்க்கும் வகையில், ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம் செய்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த பிறகு நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வரவேற்பு பெருகும் நிலை ஏற்பட்டது. பிஎஸ்என்எல் சிம் கார்டு விற்பனை, இதுவரையில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அதன் தினசரி, மாதாந்திர மற்றும் ஆண்டுத் திட்டங்களில் பலவற்றின் கட்டணத்தை உயர்த்திய சில வாரங்களுக்குப் பிறகு, வாடிக்கையாளரின் அதிருப்தியை போக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரூ,349 பிரீபெய்ட் பிளானிற்கான தினசரி டேட்டா கேப் அல்லது இலவச எஸ்எம்எஸ்  எண்ணிக்கையில் அளவை மாற்றாமல், திட்டத்தின் வேலிடிட்டி காலத்தை 28 முதல் 30 நாட்கள் வரை நீட்டித்து, பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, பயனர்கள் கூடுதலாக 2 நாட்கள் பலன்களை பெறுவார்கள். மேலும், இந்த திட்டம் ஜியோவால் ஹீரோ 5ஜி என மறுபெயரிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது X தள பதிவில், ஜியோ ரூ. 349 திட்டம் இப்போது 30 நாட்கள் செல்லுபடியாகும் என்றும் தினசரி 2ஜிபி டேட்டா வரம்பை மாற்றாமல் மொத்த டேட்டா பலனை 56ஜிபி என்ற அளவில் இருந்து 60ஜிபியாக அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, ஜியோவின் True 5G சேவை உள்ள பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G இணைய அணுகலையும் அனுபவிக்க முடியும்.

இருப்பினும், எதிர்காலத்தில் மற்ற பிரீபெய்ட் திட்டங்களும் இதே போன்று மாற்றங்களைக் காணுமா என்பதை நிறுவனம் குறிப்பிடவில்லை. முன்னதாக, ரூ. 349 திட்டத்தின் கட்டணம் ரூ. 299 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், கட்டணங்களை ஜியோ உயர்த்திய நிலையில், பல பிரீபெய்ட் திட்டங்களுக்கான கட்டணம் அதிகரித்தது. நாளைக்கு 1 ஜிபி வழங்கும் ரூ. 209 திட்டம் ரூ. 249 என்ற அளவிலும், 84 நாட்கள் வேலிட்டிட்டி கொண்ட ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு வசதியை கொடுக்கும் ரூ.666 மதிப்பிலான திட்டம் ரூ. 799 என்ற அளவிலும் அதிகரித்தது மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி தரவு வசதியை கொடுக்கும் ரூ. 2,999 ஆண்டு திட்டம் ரூ.3,599 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டது. கூடுதலாக, டேட்டா ஆட்-ஆன் பேக்குகள் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணமும் அதிகரித்தது.

சமீபத்திய விலை உயர்வினால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை போக்கவும், வணிக வளர்ச்சியை கருத்தில் கொண்டும், ஜியோ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வணிக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.