நடிகராகும் கனவுடன் திரையுலகில் காலடி எடுத்துவைத்து, உதவி இயக்கநராகப் பணியாற்றிய, பின் இயக்குநராக தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ ஆகிய திரைப்படங்களைக் கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா.
பிறகு இறைவி படத்தின் மூலம் மிகப் பெரிய ப்ரேக் கிடைக்க தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் தற்போது கலக்கி வருகிறார்.
சமீபத்தில் நடந்த 2023ம் ஆண்டுக்கான ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ விழாவில் ‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்காக ‘சிறந்த பொழுதுபோக்கு நடிகர்’ என்ற விருதை இயக்குநர் நெல்சன் கைகளால் பெற்றார்.
விழா மேடையில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “‘மார்க் ஆண்டனி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இந்த இரண்டு திரைப்படமுமே இரண்டு பரிமாணங்கள் கொண்டது. இரண்டும் நேரெதிரான வெவ்வேறு கதாபாத்திரங்கள். இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு நன்றிகள். முதலில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். பிறகு விஷால் சார் என்னிடம் வலியுறுத்திக் கேட்டதால் நடித்தேன்.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் சார், ‘இயக்குநராக நடிக்க வேண்டும்’ என்றார். ‘இப்போதுதான் இயக்குநர் எல்லாம் வேண்டாம் நடிப்புதான் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் இயக்குநரா… ‘ என்று மறுத்துவிட்டேன். ஆனால், கடைசியாக அப்படத்திலும் நடித்தேன். கலைதான் அதற்கான கலைஞரை தேர்ந்தெடுக்கும் என்பதுபோல் இந்த இரண்டு படங்களும் என்னை தேர்ந்தெடுத்தது” என்று மகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
இயக்குநர் நெல்சன் பற்றி பேசிய எஸ்.ஜே.சூர்யா, “நம்ம ஜெயிலர் இயக்குநர் நெல்சன், இன்னைக்கு உலகம் முழுவதும் பிரபலமாகிட்டார். நானும் அவரும் நல்ல நண்பர்கள். ‘ஜோடி நம்பர் 1’ ஷோவை அவர் இயக்கியபோது என்னை அழைத்து நடுவராகப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்புக் கொடுத்தார். இன்று இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது படத்தில் கேமியோவாக நடிக்க என்னை கூப்பிட்டிருந்தார். ஆனால், அதை நான் மறுத்துவிட்டேன். நிறைய சம்பளம் கொடுத்து ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்கச் சொன்னார். வாங்கும் சம்பளத்திற்கு ஏற்றபடி நடிக்க வேண்டும். அதிக சம்பளம் வாங்கிவிட்டு, ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிப்பது நியாயமாக இருக்காது. அதனால் அதை அன்று மறுத்திவிட்டேன். 100 மூட்டை தூக்குவதற்கு சம்பளம் கொடுத்துவிட்டு, 10 மூட்டை தூக்க வைக்கக்கூடாது. நல்லதொரு வாய்ப்பில் விரைவில் நிச்சயம் நெல்சன் இயக்கத்தில் நடிப்பேன்” என்று பேசியிருக்கிறார்.