பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படத்தின் சென்ஸார் முடிந்திருக்கிறது. படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருப்பதாகத் தகவல் வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்து வரும் விக்ரம், விரைவில் தான் அடுத்து நடிக்கும் படத்தை அறிவிக்க உள்ளார்.
ஒரு படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படத்தைத் தொடங்குவது விக்ரமின் ஒர்க்கிங் ஸ்டைல். கதையைக் கேட்ட பின், அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதுடன் அதற்காகவே தன்னை செதுக்கிக் கொள்வது அவரது பாணி. ‘சேது’ தொடங்கி சமீபத்திய தங்கலான் படம் வரை அவரது உழைப்பைத் திரையிலும் கொண்டு வந்துவிடுபவர். அவரது 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தை ‘சித்தா’ சு.அருண்குமார் இயக்கி வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் விக்ரமுடன் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூராஜ் வென்ஜரமூடு, துஷாரா விஜயன் தவிரப் புதுமுகங்களும் நிறையப் பேர் நடித்து வருகின்றனர். அதன் டைட்டில் டீசரில் ஆக்ஷனும் த்ரில்லரும் கலந்துகட்டி கேங்க்ஸ்டர் படமாக அறிவிக்கப்பட்டது.
மதுரை பின்னணியில் நடக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர், மதுரையில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தத் திட்டமிட்டனர். மதுரையைத் தொடர்ந்து தென்காசியிலும் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தன. எஸ்.ஜே.சூர்யா இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் முன்கதை அதாவது பாகம் ஒன்றுக்கான கதை ‘வீர தீர சூரன் பாகம்1’ ஆக வெளியாகும் என்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் போட்டுக் கொடுத்துவிட்டதால், தென்காசி ஷெட்யூலில் பாடல்களும் ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கியுள்ளனர். இப்போது சின்னதொரு பிரேக்கில் இருக்கும் படக்குழு, அடுத்த மாதம் மீண்டும் தென்காசி, மதுரை ஏரியாவிற்கே செல்ல உள்ளது. இந்நிலையில் ‘வீர தீர சூரன்’ படத்திற்குப் பிறகு தான் நடிக்கும் படத்திற்கான கதையைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார் விக்ரம். ஏற்கெனவே ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா உள்படப் பலரிடமும் கதைகள் கேட்டு வைத்தார். அதில் தான் சு.அருண்குமாரின் கதை பிடித்துப் போக, உடனே படப்பிடிப்புக்கும் கிளம்பினார்.
இப்போது இந்த படப்பிடிப்பு இன்னும் சில மாதத்தில் முடிவடைந்துவிடும் என்பதால், அடுத்த படத்திற்கான கதைகளைக் கேட்டு வருகிறார். ‘மௌனகுரு’, ‘மகாமுனி’, ‘ரசவாதி’ ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார், விக்ரமிடம் ஒரு லைன் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். தரணியின் உதவியாளராக இருந்த போது விக்ரமின் ‘தில்’, ‘தூள்’ படங்களில் இவர் வேலை செய்திருப்பதால், விக்ரமின் குட்புக்கில் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
சாந்தகுமார் தவிர, இளம் இயக்குநர்கள் சிலரிடமும் கதைகள் கேட்கவிருக்கிறார் விக்ரம். அனேகமாக அடுத்த மாத இறுதியில் அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யாரெனத் தெரிந்துவிடும் என்கிறார்கள்.