இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘U1 Long Drive Live Concert’ ஜூலை 27ம் தேதி சென்னை நந்தனம் ‘YMCA’ மைதானத்தில் நடக்கவிருக்கிறது.
இதையோட்டி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த யுவன் ஷங்கர் ராஜா, தனது இசைக் கச்சேரி குறித்தும் யுவனின் சகோதரியும், இசையமைப்பாளரும், பாடகியுமான மறைந்த பவதாரணியின் குரலில் AI மூலம் உருவாக்கப்பட்ட ‘GOAT’ படத்தின் ‘சின்னச் சின்னக் கண்கள்’ பாடல் குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் யுவன், “இந்த ‘சின்னச் சின்னக் கண்கள்’ பாடலை பெங்களூரில்தான் கம்போஸ் செய்தேன். பாடலின் ட்யூனைக் கேட்டதும் நானும், வெங்கட் பிரபுவும் இப்பாடலை பவதாரணி பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால்… அப்போது பவதாரணி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பவதாரணி குணமாகி திரும்பியதும் அவரைப் பாட வைக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இப்படியான சோகம் நிகழ்ந்துவிட்டது.
அதன்பிறகு இப்பாடலை எப்படி பண்ணலாம் என்று குழப்பத்தில் இருக்கும்போது ரஹ்மான் சார் ‘லால் சலாம்’ படத்தில் காலமான பம்பா பாக்யா, ஷாகுல் ஹமீத் அவர்களின் குரலை ‘AI’ மூலம் மீட்டுருவாக்கம் செய்திருந்தார். இதுபற்றி ரஹ்மான் சாரின் மகன் அமீனிடம் கேட்டேன். அவர் எனக்கு இதுபற்றி சொன்னார். அதன்பிறகு, AI தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொண்டு பவதாரணி குரலில் ‘சின்னச் சின்னக் கண்கள்’ பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை ‘U1 Long Drive Live Concert’ -ல் பாடவிருக்கிறோம்.
விஜய் சாரின் ‘GOAT’ திரைப்படத்தின் பாடலும், பின்னணி இசையும் நன்றாக உருவாகியிருக்கிறது. இதன் மூன்றாவது பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. அப்பாடல் சீக்கிரமே வெளியானால் ‘U1 Long Drive Live Concert’ -ல் அப்பாடலை பாடுவேன்” என்று பேசியிருக்கிறார்.