கர்நாடக மாநிலம், பெங்களூரில் பழக்கடை வைத்திருக்கும் அசோக், விரைவாகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் பைக் திருட தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஒரு மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். வெளியே வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு பழையபடி திருடத் தொடங்கியிருக்கிறார். கிரி நகரில் உள்ள மென்பொருள் பொறியாளருடைய பைக்கை திருடியிருக்கிறார். சில அடையாளங்களை வைத்து, குற்றவாளி அசோக் என்பதை காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. திருடப்பட்ட பைக் தொடர்பாக காவல்துறை விசாரித்ததில், மனைவியைப் பிரிந்த அசோக் தன் நண்பனின் வீட்டில் தங்கி வருகிறார்.
பைக்கை திருடி விற்ற பணம் முழுவதையும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது நண்பரின் மனைவியின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார். சிறையிலிருந்து வெளியே வந்தபோது திருடக் கூடாது என்றே முடிவு செய்திருந்ததாகவும், ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பனின் மனைவிக்குச் சிகிச்சை செய்ய முடியாமல் நண்பன் படும்பாட்டைப் பார்த்து மீண்டும் திருடத் தொடங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். அடைக்கலம் கொடுத்த நண்பனுக்கு நன்றி உணர்வுடன் இருக்கத் திருடத் தொடங்கிய இந்த செய்தி, தற்போது அந்தப் பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.