திடீரென நடந்த ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு, பைடனின் விலகல், கமலா ஹாரிஸை அவர் ஆதரித்தது என அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்க ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுள்ள கமலா ஹாரிஸின் முதல் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அதற்கு வரவேற்பும் உள்ளது. எதிர்மறை விமர்சனங்களும் இருக்கின்றன.
மேடைப் பேச்சுக்கள், அரசியல் உரைகள் கமலாவுக்கு புதிது அல்ல என்றாலும்கூட அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் அவர் நிகழ்த்திய முதல் உரை என்பதால் அதில் அவர் கூடுதல் மிடுக்குடன் பேச அது தேர்தல் கருத்து கணிப்புகளில் அவர் ட்ரம்பைவிட சற்றே ஒருபடி மேலே செல்லும் அளவுக்கு அமைந்துவிட்டது.
முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்த கமலா! 17 நிமிடங்கள் பேசிய கமலா ஹாரிஸ், தான் ஒரு முன்னாள் வழக்கறிஞர், தன்னை எதிர்க்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் கிரிமினல் குற்ற வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு ஓடிக் கொண்டிருப்பவர் என்ற ஒப்பீட்டுடன் தொடங்கினார்.
தேர்தலில் தான் வெற்றி பெற்றால் கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம், தொழிலாளர் நலச் சங்க நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு தீர்வு என பலவற்றில் கவனம் செலுத்தப்படும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.
குறிப்பாக, “டொனால்ட் ட்ரம்ப் நம் தேசத்தை பின்னோக்கி இழுத்துச் செல்வார். நாம் சுதந்திரமான, சட்டத்தை பின்பற்றும் தேசத்தில் வசிக்க வேண்டுமா அல்லது வெறுப்பும், பயமும், குழப்பமும் நிரம்பிய தேசத்தில் இருக்க வேண்டுமா?” என்று வினவி கூட்டத்தில் இருப்பவர்கள் ‘கமலா, கமலா’ என ஆர்ப்பரிக்கச் செய்தார்.
தேர்தலை தீர்மானிக்குமா கருக்கலைப்புச் சட்டம்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பிரதானப் பிரச்சினை அத் தேர்தலின் போக்கை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில், 2024 அமெரிக்க அதிபர் தேர்தலின் போக்கை தீர்மானிக்கும் விஷயங்களில் மிக முக்கியமானதாக கருக்கலைப்புச் சட்டம் இருக்கிறது.அந்த அஸ்திரத்தை சரியான நேரத்தில் கையில் எடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்.
அது ஏன் என்று திரும்பிப் பார்த்தால் 2022 தீர்ப்பை சற்றே பின்னோக்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகும். 2022ல் அமெரிக்க கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. ‘மாகாணங்களுக்கான கருக்கலைப்பு விதியை மாகாண அரசுகளே இயற்றிக்கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த உத்தரவு. பெரும்பாலான மாகாணங்கள் கருக்கலைப்பை ஆதரிக்கவில்லை.
1973க்கு முன்பு, கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும் அமெரிக்கப் பெண்கள், கருக்கலைப்பு தடைசெய்யப்பட்ட மாகாணங்களைச் சேர்ந்தவர்களாகவும் வசதியுள்ளவர்களாகவும் இருந்தால், அவர்களுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்ட மாகாணங்களுக்குச் செல்வது அல்லது உள்ளூரில் தெரிந்த மருத்துவரிடம் சட்ட விரோதமாக அதே நேரம் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்வது.
வசதியற்ற பெண்களுக்கும் இரண்டு தெரிவுகள் இருந்தன. வேண்டாத மகவைப் பெற்றெடுப்பது அல்லது பாதுகாப்பற்ற கருக்கலைப்பை மேற்கொள்வது. இதில் அதிகமும் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பினப் பெண்களும் பதின்பருவத்துப் பெண்களும்.
இந்தச் சூழலில் தான் ‘கருக்கலைப்பு என் அரசியல் உரிமை’, ‘பெண்ணின் உடல் பெண்ணின் தேர்வு’, ‘உங்கள் கருத்தை எங்கள் வயிற்றில் திணிக்காதீர்கள்’ என்று கருக்கலைப்புக்கு ஆதரவான குரல்கள் மேலோங்கின. ஆனால் அவற்றை எல்லாம் நீர்த்துப் போகச் செய்தது கருக்கலைப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு.
இதனாலேயே இப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பு கூடியிருக்கும் நிலையில், இந்தச் சட்டம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. 2022-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ட்ரம்பால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் தலையீடே காரணம் என்ற குற்றச்சாட்டை ஜனநாயக கட்சி அன்று தொடங்கி இன்றுவரை முன்வைத்து வருகிறது. இதனையே கமலா ஹாரிஸ் தற்போது தனது முதல் பேச்சிலும் லாவகமாக முழங்கினார்.
44 சதவீதம் ஆதரவு: கடந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். அதன்பின்னர் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் Reuters/Ipsos கருத்துக் கணிப்பில் கமலாவுக்கான ஆதரவு 44 சதவீதமாகவும், ட்ரம்புக்கான ஆதரவு 42 சதவீதமாகவும் உள்ளது. கமலா சற்றே முந்துகிறார். ஆனால் இந்தக் கருத்துக் கணிப்பு அதற்கு முன்னதாகவும் பைடன் அதிபர் தேர்தலில் முந்துவதாக தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை என பிரபல ஊடக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முன்னாள் அதிபரே இவ்வாறாகக் கூறியிருப்பதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சொந்தக் கட்சியிலேயே சந்தேகங்கள் இருக்க ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, “2020 அதிபர் தேர்தலில் களம் காண்பதற்கான போட்டியில் கமலா ஹாரிஸ் முதல் சுற்றுக்கே தாக்குப் பிடிக்கவில்லை. நான் இப்போது அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க விரும்புகிறேன். ஆனால் அவர் அதில் நிச்சயம் தோற்பார். ஏனென்றால் அவர்கள் கட்சியின் அரசியல் கொள்கைகள் அன்றும், இன்றும் மாறவே இல்லை” என்று கூறினார்.
முன்னதாக ஜூன் 27 ஆம் தேதி அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப் – பைடன் நேரடி விவாதம் நடந்தது. அதில் பைடன் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அடுத்த விவாக நிகழ்வு செப்டம்பர் 10ல் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளர் குறித்து தகவல் வெளியாகும். அதன் பின்னரே அடுத்த நேரடி விவாதத்தில் ட்ரம்புடன் களமாடப் போவது கமலா ஹாரிஸா என்பது உறுதியாகும்.