ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சிசிடிவி கேமரா மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு வசதி ஏற்படுத்தப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் 200-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் தங்கி உள்ளனர். விடுதி கட்டிடம் சேதமடைந்ததால், புதிய விடுதி கட்ட கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.7.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் விடுதி தனியார் பள்ளி வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு, சேதமடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விடுதி கட்டுமான பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைந்து முடித்து விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அமைச்சர் அறிவுறுத்தினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதன்பின் அமைச்சர் கூறியதாவது: “விரைவில் பணிகளை முடித்து விடுதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு வசதி ஏற்படுத்தப்படும்” என அமைச்சர் கூறினார்.
அதன்பின் கிருஷ்ணன்கோவில் அருகே குன்னூர் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அமைச்சர் மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். கோட்டையூர் ஆதிதிராவிட உயர்நிலை பள்ளி கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.