கொழும்பு,
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால், அடுத்த அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அங்கு அரசியல் கட்சிகள் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். இதனிடையே, அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் சரத் பொன்சேகா இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.