Medals Won By India In Olympics History: 33ஆவது சம்மர் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் மற்றும் அதை சுற்றிய 16 நகரங்களில் நடைபெறுகிறது. பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வரும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 28 முக்கிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உள்பட மொத்தம் 32 விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 124 இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா 35 பதக்கங்களை பெற்றுள்ளன. அதுவும் கடந்த ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை பெற்றதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை பெற்றது. அந்த வகையில், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா என்னென்ன பதக்கங்களை எப்போது பெற்றது போன்றவற்றை இங்கு விரிவாக காணலாம்.
இந்தியாவின் முதல் பதக்கம்
இந்தியா சுதந்திரம் பெறும் முன்னரே ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. 1900ஆம் ஆண்டில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் நார்மன் பிரிட்சார்ட் ஆடவர் 200 மீட்டர் ஒட்டப்பந்தயம் மற்றும் 200 மீட்டர் தடையோட்டப்பந்தயம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். அதாவது முதல் ஒலிம்பிக்கிலேயே இவர் பதக்கம் பெற்றார். இந்தியா சார்பில் விளையாடினாலும் இவர் ஆங்கிலேயர் ஆவார்.
இதை தொடர்ந்து, 1928, 1932, 1936, 1948, 1952 ஆகிய ஒலிம்பிக் தொடர்களில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப்பதக்கங்களை குவித்து அசத்தியது. 1952 ஹெல்சின்கி நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் கேடி யாதவ் என்பவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இதுதான் முதல்முறையாகும்.
ஹாக்கி குவித்த பதக்கங்கள்
அதன்பின், ஆடவர் ஹாக்கியில் இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்தது. 1956இல் தங்கம், 1960இல் வெள்ளி, 1964இல் தங்கம், 1968 மற்றும் 1972இல் வெண்கலம், 1980இல் தங்கம் வென்றது. அதன்பின் சுமார் 41 ஆண்டுகளுக்கு பின் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்தியாவின் மொத்தம் 35 பதக்கங்களில் 11 பதக்கங்கள் ஆடவர் ஹாக்கி அணியின் மூலமே வந்துள்ளன. அதில் 8 தங்கப் பதக்கங்களாகும்.
இந்தியாவின் 35 பதக்கங்களில் தங்கப் பதக்கம் என்பது 10 தான். அதில் 8 தங்கத்தை ஹாக்கியில் இந்தியா பெற்றிருந்தது. மீதம் இரண்டில் 2008ஆம் ஆண்டு ஆடவர் துப்பாக்கிச் சூடு போட்டியில் அபினவ் பிந்த்ராவும், 2021ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ராவும் தங்கம் வென்றுள்ளனர். இந்தியாவின் மொத்த 35 பதக்கங்களில் தங்கம் 10, வெள்ளி 9, வெண்கலம் 16 ஆகும்.
தொடர்ந்து மிரட்டும் இந்தியா
கடந்த சில ஆண்டுகளாகவே ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது எனலாம். 2008இல் 3 பதக்கங்கள், 2012இல் 6 பதக்கங்கள், 2016இல் 2 பதக்கங்கள், 2021இல் 7 பதக்கங்கள் என நான்கு ஒலிம்பிக்கில் மட்டும் 18 பதக்கங்களை குவித்துள்ளது. இம்முறையும் பதக்கங்களை குவிக்க வீரர்கள் தயாராக உள்ளனர். இதில் சுஷில் குமார், பிவி சிந்து ஆகியோர் மட்டுமே இரண்டு முறை இந்தியா சார்பில் பதக்கங்களை வென்றுள்ளனர். சுஷில் குமார் 2008 வெண்கலம், 2012இல் வெள்ளிப் பதக்கங்களை குவித்தார். பிவி சிந்து 2016இல் வெள்ளி, 2020இல் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
பெண்கள் வென்ற பதக்கங்கள்
ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பெண்கள் 8 பதக்கங்களை பெற்றுள்ளனர். 2000இல் பளூ தூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரி – வெண்கலம், 2012இல் பேட்மிண்டனில் சாய்னா நெஹ்வால் – வெண்கலம், 2012இல் குத்துச்சண்டையில் மேரி கோம் – வெண்கலம், 2016இல் பேட்மிண்டனில் பிவி சிந்து – வெள்ளி, 2016இல் மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் – வெண்கலம், 2020இல் பளூதூக்குதலில் மீராபாய் சானு – வெள்ளி, குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹைன் – வெண்கலம், பேட்மிண்டலில் பிவி சிந்து – வெள்ளிப் பதக்கங்களை பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது.