"கல்யாணத்துக்காக பொண்ணு தேடுறேன்; வரதட்சணையே வேணாம்!" – அப்புக்குட்டி பேட்டி

மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ பட டீசர் மூலம் ஹீரோவாக டைம் லைனுக்கு வந்திருக்கிறார் நடிகர் அப்புக்குட்டி.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்து ‘சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது’ பெற்ற நடிப்புக்குட்டி இவர். சமீபத்தில் வெளியான ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தின் டீசரில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் சூழலில் கள்ளச்சாராய சாவு மையப்படுத்திய வசனங்கள் இடம்பிடித்து கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ‘ஜீவ காருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ என அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்துவரும் அப்புக்குட்டியிடம் சில கேள்விகளை முன்வைத்தேன். “கள்ளச்சாரய மரணங்கள் குறித்து உங்க பார்வை என்ன?” என்றதும் உடனடியாக வருகிறது பதில்.

பிறந்தநாள் வாழ்த்துகள் திரைபப்டம்

“கள்ளச்சாரய மரணங்களை ஏத்துக்கவே முடியாது. தரமில்லாம விற்கிறதாலதான் உயிரிழப்புகள் ஏற்படுது. ஆனா, டாஸ்மாக்கிலும் தரமில்லாத மதுதான் விற்பனை செய்யப்படுது. பணத்துக்காக தரமில்லாததைக் கொடுக்கிறாங்க. எந்தவகை மதுவா இருந்தாலும் குடும்பங்கள் அழியுறதை ஏத்துக்கவே முடியாது. இதையெல்லாம் மையப்படுத்திதான் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை உருவாக்கியிருக்கோம்.

இன்றைய சூழல்ல மக்களுக்கு ரொம்பத் தேவையான படம். கருத்தம்சம் கொண்ட இந்தக் கதையை இயக்குநர் உணர்வுப்பூர்வமா மட்டுமில்லாம காமெடியாவும் வித்தியாசமா உருவாக்கியிருக்கார். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நிச்சயம் படம் பெருசா பேசப்படும்.

அதேமாதிரி, ‘ஜீவ காருண்யம்’, ‘வாழ்க விவசாயி’ படங்களிலும் ஹீரோவா நடிச்சுக்கிட்டிருக்கேன். மூணு படங்களுமே சமூக அக்கறையோடு மக்கள் பிரச்னை பற்றி பேசுறதுல ரொம்ப சந்தோஷம். அதேநேரம், ஹீரோவா மட்டுமில்லாம வாய்ப்பு கிடைக்குற காமெடி ரோல்களிலும் நடிச்சுட்டிருக்கேன். நடிப்புதான் எனக்கு உயிர். ஹீரோ, காமெடி, நெகட்டிவ், சப்போர்ட்டிவ் ரோல்னு எது கிடைச்சாலும் ஆர்வமா பண்ணிடுறேன். என்னை இன்னைக்கு ஒரு நடிகனா அடையாளம் காட்டுறது ‘வெண்ணிலா கபடிக்குழு’ தான்.

அந்தப் படத்துல நடிச்ச விஷ்ணு விஷால், சூரி, நான் எல்லோருமே ஹீரோவாகியிருக்கோம். விஜய் சேதுபதியும் அந்தப் படத்துல ஒரு ரோல் பண்ணியிருந்தார். அவரும் இப்போ பெரிய ஹீரோவாகியிருக்கார். இதுக்கு, முழுக்காரணம் சுசீந்திரன் சார்தான். வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

இயக்குநர் சுசீந்திரன்

ஒரு ஸ்கிரிப்டை எடுத்துக்கிட்டா, உழைப்பைக் கொட்டிடுவார். ரொம்ப சின்சியாரிட்டி. நட்பு ரீதியாவும் எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார். எனக்குத் தெரிஞ்சு நிறைய பேருக்கு உதவி செஞ்சிருக்கார். சினிமாவைத்தாண்டி எதையுமே யோசிக்காத மனிதர் அவர். அப்படிப்பட்டவரோட அன்பு எனக்கு கிடைச்சிருக்கிறதுல ரொம்ப சந்தோஷம்” என்று நெகிழ்பவரிடம் சினிமாவில் சந்தித்த சவால்களையும் பகிர்ந்துகொண்டார்.

“எனக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்தான் சொந்த ஊர். அப்பா,அம்மா ரெண்டு பேருமே கூலித்தொழிலாளிங்க. வறுமையால நான் சென்னை வந்து ஓட்டல் வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். சின்ன வயசுலேயே என்னோட அம்மா இறந்துட்டாங்க. அப்பாவும் சில வருடத்துல உடம்பு சரியில்லாம இறந்துட்டார். நான் ஒரே பையன். யாரோட அன்பும் ஆதரவும் இல்லாத சூழல்லதான் எனக்கு சினிமா வாய்ப்பு ஆறுதலா அமைஞ்சது.

ஓட்டல்ல சாப்பிட வந்த சினிமாக்காரங்க புண்ணியத்தால நடிப்புத்துறைக்கு வந்துட்டேன். ஆனா, எடுத்தவுடனே பெரிய வாய்ப்பெல்லாம் கிடைச்சுடல. பேர் இல்லாத சின்ன சின்ன ரோல்லதான் நடிச்சேன். அதுல, கிடைச்ச சம்பளத்தை வச்சு அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாது. ஆனாலும், நமக்குன்னு ஒருநாள் வரும்னு நம்பிக்கையோட வாய்ப்புகளைத் தேடினேன்.

கிட்டத்தட்ட 18 வருடங்கள் வாய்ப்பு தேடுறதுலேயே போய்டுச்சு. ‘வெண்ணிலா கபடிகுழு’ மூலமாத்தான் எனக்கான அங்கீகாரம் கிடைச்சது. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்காக எனக்கு தேசிய விருதும் கிடைச்சது. மத்த வேலை பார்த்திருந்தா இந்தப் பேரும் புகழும் கிடைச்சிருக்குமான்னு தெரியாது.

என் காத்திருப்புக்கும் தேடலுக்கும் கிடைச்ச பரிசுதான் மக்களோட அன்பு. அன்பு செலுத்துறததைவிட இந்த உலகத்துல, வேற என்ன பெரிய மகிழ்ச்சி கிடைச்சுடப் போகுது?” என்று புன்னகையுடன் கேள்வியெழுப்புபவரிடம் திருமணம் குறித்து கேட்டபோது,

அப்புக்குட்டி

“எனக்காக பொண்ணு தேடுற படலம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கு. பத்து வருடத்துக்கு மேல பொண்ணு தேடிக்கிட்டிருக்கேன். சரியான துணை கிடைக்கல. இடையில், கொஞ்சம் சினிமாவுல பிஸியாகிட்டதால பொண்ணு தேடுறதை விட்டுட்டேன். இப்போ, மீண்டும் எனக்கானவங்களைத் தேடிக்கிட்டிருக்கேன். சினிமா வாய்ப்பு எப்படி அத்தனை வருடம் கழிச்சு கிடைச்சதோ, அதேமாதிரி பொண்ணும் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு. எல்லோரும் நான் நடிகர்ங்கிறதால பொண்ணு கொடுக்க யோசிக்கிறாங்க. அதுதான், மனசுக்கு கஷ்டமா இருக்கு.

அத்தனை படங்கள்ல நடிச்சிருக்கேன். வாழ்க்கையை நடத்துறதுக்கான பொருளாதாரத்தோடவும் இருக்கேன். ஆனா, பொண்ணு கிடைக்கல. எங்க அம்மா,அப்பா உயிரோட இருந்திருந்தா, இந்நேரம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்க. நான் நடிகனானதைப் பார்த்து உள்ளம் குளிர்ந்துப் போயிருப்பாங்க. எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கல. ஆனா, என்மேல அக்கறைகொண்டு சுசீந்திரன் சாரோட அப்பா, எனக்காக ஒரு பொண்ணைப் பார்த்தார். என்னைவிட பொண்ணுக்கு ரொம்ப சின்ன வயசா இருந்ததால நானே வேணாம்னு சொல்லிட்டேன். சிலநேரம் பொண்ணு கிடைக்கலன்னு மன உளைச்சல்கூட ஏற்பட்டிருக்கு.

எனக்கு மட்டுமில்ல… பொதுவாவே, ஆண்-பெண் இருவருக்குமே வாழ்க்கைத்துணை கிடைக்கலன்னா நிச்சயம் மன உளைச்சல் உண்டாகும். கிடைக்கும்போது கிடைக்கட்டும்னு நான் நம்பிக்கையோட காத்திருக்கேன். இப்போ, ஷூட்டிங் இல்லாத நேரத்துல நான்தான் சமைச்சுக்குவேன். பிரியாணியைத் தவிர எல்லாமே சூப்பரா சமைப்பேன். வத்தக்குழம்பெல்லாம் செம்மயா வைப்பேன். பொண்ணுக்கிட்ட எனக்கு பெருசா எந்தவித எதிர்பார்ப்பும் கிடையாது.

AppuKutty

முக்கியமா, எனக்கு வரதட்சணை கூட வேணாம். நல்ல பொண்ணா இருக்கணும். என்னோட தொழிலை புரிஞ்சிக்கிட்டாப் போதும்” என்பவரிடம் “எல்லோர் வாழ்க்கையிலும் காதல் இருந்திருக்கும். உங்க வாழ்க்கைல?” என்றோம்.

“எப்படி இல்லாம இருக்கும்? நான் நிறைய பேரை லவ் பண்ணிருக்கேன். ஆனா, என்னை யாரும் லவ் பண்ணல. நான் லவ்னு சொன்னா சிரிச்சுட்டே போய்டுறாங்க. அதனால, லவ்வெல்லாம் எனக்கு செட்டாகாது” என்கிறார் அழுத்தமாக.

‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கு விரைவில் ‘திருமண நாள் வாழ்த்துகள்’ சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.