கழுகார்: `நயினாருக்கு வந்த டெல்லி உத்தரவு’ டு `அதிமுக தென்மாவட்டப் புள்ளிகளின் அதீத விசுவாசம்’

‘சசிகலா, ஓ.பி.எஸ் போன்றவர்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைத்தால்தான் தென்மாவட்டத்தில் வெற்றிபெற முடியும்’ என்று சீனியர்கள் சிலர், எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இதில் உடன்பாடு இல்லாத எடப்பாடி, ‘தென்மாவட்டங்களில் அமைப்புரீதியாகச் சில மாற்றங்களைச் செய்தாலே சரிவிலிருந்து மீண்டுவிடலாம்’ என்று நம்புகிறாராம். அதன்படி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என அமைப்புரீதியில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.

அதிமுக – எடப்பாடி பழனிசாமி – சசிகலா – ஓ.பன்னீர்செல்வம்

அதாவது, அந்தப் பகுதி சீனியர்களின் பவரைக் குறைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவிருக்கிறாராம். அவரின் இந்த அதிரடி மூவை அறிந்த மதுரை சீனியர்களான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர், சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களைக் கடுமையாக விமர்சித்தும், எடப்பாடியைத் தூக்கிவைத்துப் பேசியும் அதீத விசுவாசத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ‘தங்கள் மாவட்டத்தில் மட்டுமாவது அந்தப் பவர் குறைப்பு முடிவைக் கைவிடுவார் எடப்பாடி என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள்’ என்கிறார்கள் மதுரை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். விஜய பிரபாகரனாவது பரவாயில்லை, மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். ஆனால், “பன்னீரும் நயினாரும் ஏன் வழக்கு தொடர்ந்தார்கள்?” என விசாரித்தால், “எல்லாம் டெல்லி சொல்லித்தான்…” என்கின்றனர் கமலாலய சீனியர்கள். “நாடு முழுவதும் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராக வெற்றிபெற்ற எதிர்க்கட்சியினரின் தேர்தல் அஃபிடவிட்டைச் சரிபார்க்கச் சொல்லி டெல்லியிலிருந்து உத்தரவு பறந்திருக்கிறதாம்.

நயினார் நாகேந்திரன்

அதனடிப்படையில் ஒரு குழு அஃபிடவிட்டுகளை ஆராய்ந்ததில், நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் சில தகவல்களை மறைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்தத் தகவலைச் சொல்லி, டெல்லி மேலிடம் வழிகாட்டியதாலேயே நயினார் வழக்கு தொடர்ந்திருக்கிறார்” என்கிறார்கள் அவர்கள். இதை எதிர்கொள்ளத் தயாராகும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தரப்பு, நயினார் தொடர்பான 4 கோடி ரூபாய் வழக்கு விவரங்களைத் திரட்டத் தொடங்கியிருக்கிறதாம்.

தி.மு.க-வில் சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு சரியில்லை என்ற அதிருப்தியிலிருக்கிறது தலைமை. முதற்கட்டமாக மூன்று மாவட்டச் செயலாளர்களை மாற்றவும் முடிவெடுத்திருக்கிறதாம். “அவர்களில் ஒருவர், ஆந்திர எல்லையையொட்டிய ‘திரு’வான மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அண்ணா அறிவாலயம்

இன்னொருவர் அல்வா மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர். மற்றொருவர் டெல்டா மாவட்டப் புள்ளி” என்கிறது அறிவாலய வட்டாரம். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட `திரு’வான மாவட்டத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர், சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேலிடத்து மாப்பிள்ளையை நேரில் சந்தித்து வாழ்த்துவதுபோல, ‘மாவட்டச் செயலாளர் பதவிக்குத் துண்டு போட்டுவிட்டு வந்துவிட்டாராம்.

“தி க்ரைம் முன்னேற்ற கழகம்… தி.மு.க-வில் ரெளடிகள்” என்ற பெயரில் 112 பேர் அடங்கிய லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை, “பா.ஜ.க-வில் யார் யாரோ இருப்பதாகச் சொல்லி குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் செய்வோரின் பட்டியலை நான் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்” என்று நீட்டி முழக்கினார். தி.மு.க அதற்கு பெரிதாக எதிர்வினையாற்றவில்லையென்றாலும், கமலாலய சீனியர்களோ கரித்துக்கொட்டுகிறார்கள். “ஏற்கெனவே, `தி.மு.க ஃபைல்ஸ்’ என்ற பெயரில் இப்படித்தான் ஓர் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதை டிரங்குப் பெட்டியில் கொண்டுபோய் ஆளுநரிடமும் கொடுத்தார்.

அண்ணாமலை

எந்தப் பிரயோஜனமும் இல்லை. மறுபடியும் ஊடக வெளிச்சத்துக்காக அடுத்த லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறார். இவர் திருந்தவே மாட்டாரா… தேவையில்லாத வேலைகளை விட்டுவிட்டு கட்சி வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யக் கூடாதா?” எனக் கேட்கிறார்கள் அந்த சீனியர்கள்.

தமிழக காவல்துறையில் 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த 24 ஏ.டி.எஸ்.பி-க்களுக்கு விரைவில் எஸ்.பி பதவி உயர்வு வழங்கப்படவிருக்கிறது. அதற்கான கோப்பு மாநில உள்துறை அலுவலகத்தில் தயாராக இருக்கிறது. இந்தப் பதவி உயர்வு பட்டியலில் இருக்கும் சிலர், முக்கியமான மாவட்டங்களின் எஸ்.பி பதவியை டார்கெட் செய்து ஆளுங்கட்சியின் பவர் சென்டர்கள் மூலம் காய்நகர்த்திவருகிறார்களாம்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் எஸ்.பி-க்கள், டி.ஐ.ஜி-க்களும் மாற்றப்படவிருக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு நடக்கும் இந்த டிரான்ஸ்ஃபரிலாவது நல்ல இடத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்று சில ஐ.பி.எஸ்-களும் டி.ஜி.பி அலுவலகத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்களாம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.