சென்னை: ‘பஸ்டே’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை மடக்கி, அந்த பேருந்தை அலங்கரித்து, அதில் சாலை வழியாக மெதுவாக பயணித்து கல்லூரியை சென்றடைவார்கள். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானதையடுத்து ‘பஸ்டே’வுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வேப்பேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததோடு, பேருந்தின் மேற்கூரையில் ஏறி ஆட்டம் போட்டுள்ளனர்.
மேலும், தங்களது புத்தகப்பையை பேருந்தின் மேற்கூரை நோக்கி தூக்கி வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். ஆனால் மாணவர்கள் பேருந்திலிருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் இந்த அட்டகாசத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட நேரத்துக்கு பின்னர் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும் மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் அடிப்படையில் அத்து மீறலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வேப்பேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.