மொனராகலை, புதுருவகல மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் அண்மையில் (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, பழைய பாராளுமன்றக் கட்டடத்தின் பெருமைக்குரிய வரலாறு மற்றும் பாராளுமன்ற முறைமையின் வளர்ச்சி குறித்துச் சுட்டிக்காட்டினார். அத்துடன், மாணவர்கள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பையும் ஜனாதிபதி வழங்கினார்.
பாராளுமன்ற நடைமுறை குறித்த விரிவான விளக்கத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மாணவர்களுக்கு வழங்கினார். பாராளுமன்ற முறைமை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதற்கு அப்பால் ஜனாதிபதியின் கருத்திட்டத்துக்கு இணங்கும் வகையில் எதிர்கால சந்ததியினரிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் மாணவர் பாராளுமன்றம் விளங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் மக்களையும் பாராளுமன்றத்தையும் இணைப்பதற்கும், இரு தரப்பினரையும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகவும் கொண்டுவருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தின் பிரதான செயற்பாடுகள் குறித்து பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன மாணவர்களுக்கு விளக்கமளித்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்கினார்.
மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக மாணவர்கள் மத்தியில் பாராளுமன்றத்தின் பொறுப்புக் குறித்த அறிவை ஏற்படுத்த முடியும் என இங்கு உரையாற்றிய புதுருவகல மகா வித்தியாலயத்தின் அதிபர் எச்.எம்.யூ.பி.மஹேரத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராளுமன்றத்தினால் சான்றிதழும் புத்தகங்களும் கையளிக்கப்பட்டன. அது மாத்திரமன்றி பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்திற்கும், விசேட விருந்தினர்களுக்கும் பாடசாலையிலிருந்து நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.