நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதில் அமைதி காத்து வருகிறார்.
இது குறித்து பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸால் வீழ்த்த முடியும் என ஒபாமா எண்ணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒபாமா உற்சாகம் குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கமலா ஹாரிஸ் இந்தப் போட்டியில் வெல்ல முடியாது என அவர் நினைக்கிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லை விவகாரத்தில் கமலா ஹாரிஸின் செயல்பாடு இதற்கு ஒரு காரணமாக அமைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 21-ம் தேதி அன்று அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அந்த தருணம் முதலே ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ரேஸில் தற்போதையை துணை அதிபர் கமலா ஹாரிஸின் கை ஓங்கி இருந்தது. அவருக்கு அதிபர் பைடனும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
“துணை அதிபர் கமலா ஹாரிஸ் திறன் கொண்டவர். அவருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். தேசத்தை வழிநடத்துவதில் அனுபவம் பெற்றவர். நம் நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் என சொல்லும் வகையில் பணியாற்றி உள்ளார். இப்போது சாய்ஸ் அமெரிக்க மக்களிடம் உள்ளது” என அதிபர் பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இரண்டு முறை அமெரிக்க அதிபராக பணியாற்றிய பராக் ஒபாமாவின் ஆதரவு கமலா ஹாரிஸுக்கு இல்லாதது சற்று பின்னடைவுதான். இருந்தாலும் அடுத்த மாதம் ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளர் குறித்து தகவல் வெளியாகும். அதற்குள் இந்த குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.