மதுரை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் வெளி மாநில நபர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற நீட் ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த தருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில், ”ஆள்மாறாட்ட வழக்கில் சிபிசிஐடி கேட்ட ஆவணங்களின் கைரேகை பதிவு, தேர்வுமையம், தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, ”ஒரு விசாரணை அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும், மற்றொரு அமைப்பு வழங்கினால் தான் முழுமையாக விசாரிக்க முடியும். சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை. தேர்வு எழுதிய மாணவர்களின் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இடைத்தரகர்கள் கைதாகியுள்ளார்களா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு சிபிசிஐடி தரப்பில், ”தேர்வு முகமை தரப்பிலிருந்து கைரேகை பதிவு, தேர்வுமையம், தொலைபேசி எண்கள் தொடர்பான விவரங்கள் கடந்த 22-ம் தேதி வழங்கப்பட்டது. ஆனால், இன்னமும் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விசாரணை விரிவடைந்துள்ளது. இதில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டவர் குறித்து விவரங்கள் கிடைத்துள்ளது. தேர்வு முகமை தரப்பில் மாணவர்களின் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் முறைகேடு உறுதி செய்யப்படும். எனவே, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ”வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும். அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.