‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறார் வள்ளுவர். பூமியில் வசிக்கும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு நீர் மிக அவசியமாகிறது. உணவின்றி கூட சில நாள்கள் இருந்துவிடலாம்; நீரின்றி இருக்க முடியாது.
நாம் வசிக்கும் பூமியானது கடல் மற்றும் நதிகள் என்று 70 சதவிகிதம் நீரினால் சூழ்ந்துள்ளது. மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் தேவையான ஆக்சிஜன், நமது வளி மண்டலத்தில் இருக்கிறது.
அதேபோல், தண்ணீரில் கரையக்கூடிய ஆக்சிஜன் (Dissolved Oxygen) ஆரோக்கியமான நீர்வாழ் சூழலுக்கு இன்றியமையாதது. இது, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, அதன் வாழ்வாதாரத்திற்கும் அத்தியாவசியமானது.
அண்மையில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், உலகில் உள்ள நீர்நிலைகளில் இருக்கும் கரையக்கூடிய ஆக்சிஜனின் அளவு வேகமாக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக, சயின்ஸ் அலர்ட் (science alert) என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கரையக்கூடிய ஆக்சிஜன் கடல் மற்றும் நன்னீர் பரப்பில் வாழும் உயிரினங்களுக்கு இன்றியமையாததாகும். கடல் நீரில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கினால், அது நீர்வாழ் உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்; அது உணவுச் சங்கிலியில் பிளவை ஏற்படுத்தும்’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
பருவநிலை மாற்றம், அமிலத்தன்மை உடையதாக மாறும் பெருங்கடல், வளிமண்டலத்தில் உருவாகும் ஓசோன் துளை, உலக அளவிலான பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜனின் சங்கிலி, குறைந்து வரும் பல்லுயிர் பெருக்கம், அதிக அளவு நன்னீர் பயன்பாடு, ரசாயனங்களின் பயன்பாடு, மாறி வரும் நிலப் பயன்பாடு என்று இவையெல்லாம் ஆக்ஸிஜன் குறைவதில் பங்களிக்கின்றன. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
பசுமை இல்ல வாயுக்களால் காற்று மற்றும் நீரில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் வரைக்கும் இருந்து வந்த காற்றின் சராசரி வெப்பம் அதிகரித்துள்ளது. நிலத்தில் உள்ள நீரின் அளவும் குறைந்து வருகிறது.
உலகிற்கு தேவையான ஆக்சிஜனில் 70 சதவிகிதம் கடலில் இருந்துதான் கிடைக்கிறது. உலகில் 17 சதவிகிதம் பேர் கடல் உணவினையே நம்பி இருக்கின்றனர். இந்தியாவில் 72.1 சதவிகிதம் பேர் கடல் உணவை சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் கடல் நீரில் ஆக்சிஜன் குறைந்து வருவது கடல் வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனித குலத்திற்கே பேராபத்தாக அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.