திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும் லட்டு உலக புகழ்பெற்றது. இதன் சுவைக்காகவே இதை வாங்கி சாப்பிடுவோர் அதிகம். மக்களின் நம்பகத்தன்மை பெற்ற திருப்பதி லட்டுக்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சார்பில் பல இடங்களிலிருந்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியான சியாமள ராவ், லட்டு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியில் லட்டில் சேர்க்கப்படும் பொருள்களை கொண்டு வரச் சொல்லி ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சியாமள ராவ், “தரமான லட்டை தயாரிப்பதில் மிகவும் கவனமாக செயல்படுகிறோம். சேர்க்கும் பொருள்களில் கலப்படம் இருந்தால் லட்டின் தரம் பாதிக்கப்படும். லட்டு பிரசாதத்துக்கு டெண்டர் எடுத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பொதுவாக நெய்யை வாங்கும்போது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உள்ளிட்ட சான்றிதழ்கள் வைத்திருக்கிறதா என்று பார்ப்போம். சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்வோம். அந்த வகையில் இந்நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுத்திருந்தது தேவஸ்தானம். இதுவரை இந்நிறுவனம் 68,000 கிலோ நெய்யை அனுப்பியுள்ளது. இதில் 20 ஆயிரம் கிலோ நெய் மிகவும் தரமற்றதாக இருந்ததால் திருப்பி அனுப்பி வைத்துள்ளோம். நெய்யில் வனஸ்பதியை கலந்திருப்பது எங்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
5 நிறுவனங்கள் தேவஸ்தானத்துக்கு தரமான நெய்யை அனுப்ப டெண்டர் எடுத்துள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த டெய்ரி நிறுவனம் அனுப்பிய 20 ஆயிரம் கிலோ கலப்பட நெய்யை திருப்பி அனுப்பி விட்டோம். இந்நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் வைத்திருக்கிறோம். அத்துடன் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ள இருக்கிறோம். தேவாஸ்தானத்துக்கு நெய்யை வழங்கும் பிற நிறுவனங்களையும் கலப்படம் இல்லாமல் வழங்க எச்சரித்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பால் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயரை தாங்கி மீடியாக்களில் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசியபோது, “நாங்கள் உற்பத்தி செய்யும் நெய் தரமானதாக உள்ளது. எங்கள் தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேசியபோது, “திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் இந்நிறுவனம், 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பாலை வாங்கி பதப்படுத்தி, பால், நெய், தயிர் என பல மதிப்புக்கூட்டல் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. கேரளா, தமிழ்நாடு என பல இடங்களுக்கும் தன்னுடைய பொருள்களை அனுப்பி வருகிறது. தமிழகத்தின் முக்கியமான நிறுவனங்களுக்கு நெய்யை அனுப்பி வருகிறது. இந்த நிறுவனத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நெய் பிஸினஸில் பேர் வாங்குவது பெரிய சவால். அப்படி வாங்கும் பேரை நிலைறுத்துவது அதைவிட சவால். நெய் தயாரிக்கும் நிறுவனங்கள் பொறுப்புணர்வோடு செயல்படுவது அவசியம்” என்றார்.