‘பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு’ – மத்திய அரசுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

சென்னை: பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மாவட்ட தலைநகரங்களில் ஜூலை 27-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமை விடுத்த அறிவிப்பில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.



மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த பாசிச பாஜக அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழக அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பாஜக அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்த்த திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழகம் என்கிற வார்த்தையே இடம்பெறவில்லை. மாறாக, ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.