பயிற்சியாளர் ஆன பிறகு கம்பீர் மாற்றி பேசுகிறார் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்தனர்.

அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றை கைப்பற்றும் முனைப்போடு தற்போது புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதே போன்று 2027-ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பையை குறிவைத்தும் தற்போதைய இந்திய அணியில் பல முக்கிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் 2027-ம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பிட்டாக இருந்தால் விளையாடுவார்கள் என்று கம்பீர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு யூ டர்ன் போட்டு பேசுவதாக முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், ” ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பையின்போது நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் பயிற்சியாளர் ஆவதற்கு முன்னர் அவர்கள் இருவரும் சரியாக விளையாடவில்லை என்றால் அவர்கள் நீக்கப்படுவார்கள் என்று பேசிய அவர் பயிற்சியாளராக மாறிய பிறகு அவர்களை மிகச்சிறந்த வீரர்கள் என்று கூறுகிறார்.

ரோகித் சர்மா உண்மையிலேயே நல்ல வீரர் தான். ஆனால் அவருக்கு தற்போது 37 வயதாகிவிட்டது. எனவே அடுத்த உலககோப்பைக்கு முன்னதாக அவருக்கு 40 வயதாகிவிடும். தோனி, சச்சின் போல் இயற்கையாகவே நல்ல உடற்தகுதி இருந்தால் நிச்சயம் ரோகித்தும் விளையாடலாம். ஆனால் என்னை பொருத்தவரை ரோகித் சர்மா 40 வயதில் விளையாடுவது எல்லாம் செட் ஆகாது.

அதேவேளை விராட் கோலிக்கு எந்த ஒரு சிக்கலும் கிடையாது. அவர் கடந்த பல ஆண்டுகளாகவே தனது உடலை சரியாக பராமரித்து வருகிறார். உடற்தகுதியின் அடிப்படையில் அவரை யாராலும் எந்த குறையும் சொல்ல முடியாது. மேலும் ரோகித்தை விட விராட் கோலி இரண்டு வயது குறைந்தவர் என்பதனால் நிச்சயம் அவர் அடுத்த 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடலாம்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.