மும்பை,
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அடிக்கடி காயத்தால் உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் தான் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்து இருந்தார்.
அத்துடன் உள்ளூர் தொடரில் விளையாடி பிட்னஸ் நிரூபித்தால் மட்டுமே பாண்டியாவுக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவு பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிட்டாக இல்லாமல் போயிருந்தால் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்ட்யாவால் எப்படி முழுமையாக விளையாடியிருக்க முடியும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லதீப் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்திய தேர்வுக் குழுவினர் ஏதோ ஒரு காரணத்தை சாக்காக சொல்லியுள்ளதாக விமர்சிக்கும் அவர் முடிந்தால் பாண்ட்யா பிட்டாக இல்லை என்ற சான்றிதழை கொடுங்கள் என சாடியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “அவர்கள் இதை ஒரு சாக்காக கூறியுள்ளனர். இதற்கு பேசாமல் அவர்கள் பாண்ட்யா சரியான உடற்தகுதியுடன் இல்லை என்ற சான்றிதழை கொடுக்கலாம். இங்கே பிட்டாக இல்லாமலேயே பல வீரர்கள் விளையாடி மிகச்சிறந்த கேப்டனாக சாதனை படைத்துள்ளனர். எனவே பிட்னஸ் என்பது ஒரு சாக்கு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் ஒருவேளை சூர்யகுமார் இல்லாமல் போயிருந்தால் வருங்காலத்தை பார்க்கும் நீங்கள் ரிஷப் பண்ட்டை கேப்டனாக அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.