மணிலா,
தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. ‘கெமி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் சின்னா பின்னமானது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை சூறைக்காற்றில் சிக்கி வேரோடு சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் இருந்த 6 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. பொது போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டு அரசு தெரிவித்துள்ளது.