பாட்னா: வினாத்தாளை கசியவிட்டால் ரூ.10லட்சம் அபராதம், 5 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் மசோதாபிஹார் பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்த மசோதாவை பிஹார் மாநில பேரவை விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்புசெய்தன. அதன் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பிஹாரில் நடைபெறும் நீட்உள்ளிட்ட தேர்வுகள், மாநிலங்களில் அமைந்துள்ள கல்லூரிகளில் சேர உதவும் தேர்வுகள், போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
வினாத்தாளை கசியவிடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு கைதாவோர், ஜாமீனில் வெளிவருவதிலும் நிபந்தனைகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளன. இந்த மசோதா சட்டமாக அமலாகும்போது பிஹாரில் குற்றங்கள் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.