புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மிர்சாபூரின் எம்.பியாக இருந்த பூலன் தேவியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக அவரது கட்சியான சமாஜ்வாதியினர் பூலன் தேவியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சி, உபியின் தலைநகரான லக்னோவில் உள்ள விக்கிரமாதித்ய மார்கிலுள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. உபியின் சம்பல் கொள்ளைக்காரியாக இருந்த பூலன், மனம் திருந்தி மாநில அரசின் முன் சரணடைந்தவர். பிறகு உபி முதல்வராக இருந்த முலாயம்சிங் முன்னிலையில் அவரது சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இதில் அவர் மக்களவை தேர்தலில் மிர்சாபூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியுமானார்.
இந்நிலையில் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வில் பேசிய, சமாஜ்வாதியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில தலைவர் டாக்டர் ராஜ்பால், “பூலன் தேவி சமூக நீதியின் சின்னம். அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவர். பூலன் தேவியை சமாஜ்வாதியினர் என்றென்றும் நினைவு கூர்வார்கள். அவர் உபியின் பிற்படுத்தப்பட்டோருக்காகவும், மீனவர் சமூகத்திற்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் எம்.எல்.சியான ஸ்ரீராம்விரிக்ஷ் சிங் யாதவ்,மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணைத் தலைவரான ஷியாம் கிருஷ்ணா குப்தா, செயலாளர் ராஜேந்திர லோதி, மாவட்ட தலைவரான மனோஜ் பால் கவுதம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.முன்னதாக, அனைவரும் பூலன் தேவியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பூலான்தேவி விவரம்: உபியின் ஜலோன் மாவட்டத்தில் கோரா கா பூர்வா கிராமத்தில் ஆகஸ்ட் 10, 1963 இல் பிறந்தவர் பூலன் தேவி. மீனவர் சமுதாயத்தை சேர்ந்த இவர், வீட்டு வேலைகள் செய்யும் சாதாரண பெண்ணாக வாழ்ந்தார். இவரை அக்கிராமத்து உயர்சமூகத்தினர்களான தாக்கூர்கள் பாலியியல் சித்தரவதைக்கு உள்ளாக்கினர். இவர்களை பழி தீர்க்க துப்பாக்கி ஏந்திய பூலன் தேவி, சம்பலின் பள்ளத்தாக்குகளில் பிரபல கொள்ளைக்காரியாகவும் மாறினார்.
தன்னை சித்தரவதைக்கு உள்ளாக்கிய தாக்கூர் சமூகத்தினர் 22 பேரை பேமாய் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 14, 1981-ல் சுட்டுக் கொலை செய்தார். இதன் பிறகு மேலும் பிரபலமாகி ‘சம்பல் ராணி’ என்றழைக்கப்பட்டார் பூலன் தேவி. உபி, ராஜஸ்தான் மற்றும் மபி மாநிலங்களில் பரவியுள்ள சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைக்காரியாகவும் இருந்தார். பூலனை அம்மூன்று மாநில போலீஸாராலும் கைது செய்ய முடியவில்லை. பிறகு தானாகவே முன்வந்து மத்தியப்பிரதேச முதல்வராக இருந்த அர்ஜுன்சிங் முன்னிலையில் சரணடைந்தார் பூலன். அப்போது பாதுகாப்பிற்காக மபியின் 10,300 போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
பூலனுடன் அவரது கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களும் சரணடைந்தனர். அப்போது பூலன் மீது 22 கொலை, 30 கொள்ளை, 18 ஆள் கடத்தல் வழக்குகள் உபி காவல் நிலையங்களில் பதிவாகி இருந்தனர். சுமார் 11 வருடங்கள் நடைபெற்ற இந்த வழக்குகளை முதல்வராக இருந்த முலாயம்சிங் அரசு கைவிட்டது. இதன் காரணமாக 1994 இல் சிறையிலிருந்து விடுதலையான பூலனின் வாழ்க்கை புத்துயிர் பெற்றது.உபியின் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதியில் இணைந்தவருக்கு 1996 மக்களவை தேர்தலில் உபியின் மிர்சாபூரில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் வெற்றி பெற்று எம்பியானார் பூலன்.
சம்பலின் முன்னாள் கொள்ளைக்காரியான பூலனின் கதை பாலிவுட்டின் திரைப்படமாகவும் வெளியாகி பிரபலமானது. உபியின் மிர்சாபூர் தொகுதியின் சமாஜ்வாதி எம்பியான பூலன் தேவி, டெல்லியில் அவரது அரசு குடியிருப்பில் 2001-ல் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற ஷேர் சிங் ராணா எனும் இளைஞர், தம் தாக்கூர் சமூகத்தினரை சுட்டுக் கொன்றதை பழி வாங்கும் பொருட்டு பூலனை கொன்றதாக ஒப்புக் கொண்டார். பூலனின் 24 ஆவது நினைவு நாள் இன்று மிர்சாபூர், சம்பல் உள்ளிட்ட பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது.