சென்னை புதுப்பேட்டை, திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் முகமது அஜாருதீன் (37). இவர், எழும்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரிடம் இம்ரான் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் முகமது அஜாருதீனுக்கு பிசினஸுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. அதனால் இம்ரான் என்பவர் மூலம் புளியந்தோப்பைச் சேர்ந்த சங்கீதா, அவரின் கணவர் புரட்சி சந்திரன், பெண் தாதாவும் பா.ஜ.க-வின் முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலை, திருநங்கை அலினா ஆகியோரிடம் கடந்த 2023- செப்டம்பரில் வட்டிக்கு வாங்கியிருக்கிறார். அதற்குரிய வட்டியை மாதந்தோறும் அஜாருதீன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வட்டிக்கு கொடுத்த பணத்தைவிட இரட்டிப்பு பணத்தை வாங்கிய பிறகும் அஞ்சலை மற்றும் அவரின் தரப்பினர் மீண்டும் மீண்டும் கந்து வட்டி கேட்டு முகமது அஜாருதீனை மிரட்டி வந்திருக்கிறார்கள்.
அதனால் விரக்தியடைந்த முகமது அஜாருதீன், ஒருகட்டத்தில் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்திருக்கிறார். அதற்கு பணம் கொடுத்த தரப்பு முகமது அஜாருதீனை கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கிறது. இதையடுத்து முகமது அஜாருதீன் பேசின்பாலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சங்கீதா, அவரின் கணவர் புரட்சி சந்திரன், பெண் தாதா அஞ்சலை, திருநங்கை அலினா, இம்ரான் ஆகிய 5 பேர் மீது கந்துவட்டி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் சங்கீதா அவரின் கணவர் புரட்சி சந்திரன் ஆகியோரிடம் முகமது அஜாருதீன் வாங்கிய 11 லட்சம் ரூபாய் கடனுக்கு கந்துவட்டியாக 22 லட்சம் ரூபாயையும் பெண் தாதா அஞ்சலையிடம் வாங்கிய 9.5 லட்சம் ரூபாய்க்கு 20 லட்சம் ரூபாயையும் அவர் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதுதவிர திருநங்கை அலினாவிடம் வாங்கிய பத்து லட்சம் ரூபாய் கடனுக்கு 24 லட்சம் ரூபாயை முகமது அஜாருதீன் கொடுத்ததாக விசாரணையில் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் கந்து வட்டி கும்பலை முகமது அஜாருதீனுக்கு அறிமுகப்படுத்திய இம்ரான் என்பவர் இந்தக் கும்பலின் கூட்டாளியாக இருந்திருக்கிறார். அதை மறைத்துதான் முகமது அஜாருதீனை இந்தக் கும்பலிடம் இம்ரான் சிக்க வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சங்கீதா உள்பட கந்துவட்டிக் கும்பலை போலீஸார் தேடி வருகிறார்கள். அதே நேரத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் தாதா அஞ்சலை ஏற்கெனவே கைதாகி சிறையிலிருப்பதால், இந்த கந்துவட்டி கொடுமை வழக்கிலும் அஞ்சலையை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.