புதுடெல்லி: மேற்குவங்கத்தின் கதவுகளைத் தட்டும் வங்கதேச அகதிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்ற மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் இந்த அறிவிப்பை தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்கத்தில் ஜுலை 21-ம் தேதி நடந்த தியாகிகள் தின பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்கதேசம் வேறு ஒரு நாடு என்பதால் அதைப் பற்றி நான் பேச முடியாது. அதைப் பற்றி இந்திய அரசு பேசும். ஆனால் அங்குள்ள ஆதரவற்ற மக்கள் (வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்) மேற்கு வங்கத்தின் கதவுகளைத் தட்டினால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். அண்டை நாடுகள் அகதிகளை மதிக்க வேண்டும் என்று ஐ.நா.சபையின் தீர்மானம் ஒன்று உள்ளது” என்று தெரிவித்தார்.
இதனையே வலியுறுத்தி தனது எக்ஸ் பத்தில் மம்தா வெளியிட்டிருந்த பதிவில், “வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியர்கள் மேற்கு வங்கம், இந்தியாவுக்கு திரும்புகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் உதவிகளைச் செய்யுமாறு எங்கள் மாநில நிர்வாகத்தினை நான் கேட்டுக்கொண்டுள்ளேன். நாங்கள் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகளை வழங்கினோம். ஒற்றுமையாக நிற்போம்” என்று தெரிவித்திருந்தார்.
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்புக்கு இந்திய தூதரகத்தில் வங்கதேச அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையான கருத்துகள் குறிப்பாக அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படும் போன்ற பேச்சுகளை தீவிரவாதிகள் மற்றும் தவறான நபர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிற்து.
மேலும் நிலைமையை இயல்புக்கு கொண்டு வர முயற்சி செய்து வருவதாகவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்து தவறானது. ஐ.நா. சபையின் தீர்மானம் நாட்டில் நடைமுறையில் இல்லை என்றும் இந்திய தூதரகத்தில் வங்கதேசம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, மேற்குவங்க முதல்வர் மம்தாவின் கருத்துக்கு ஆட்சேபனைத் தெரிவித்து பேசிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஹசன் மஹ்முத், “மேற்கு வங்க முதல்வரின் கருத்து குழப்பத்தை விளைவிக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதுகுறித்து இந்திய அரசுக்கு ஒரு குறிப்பையும் அளித்துள்ளோம்” என்று கூறியிருந்தார்.
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்தே அங்கிருந்து பலரும் குறிப்பாக மாணவர்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புக முயற்சித்து வருகின்றனர். வங்கதேச வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.