சென்னை: புதுமைப் பெண் திட்டத்தைப்போல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தற்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்திட்டத்தைப்போல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கை: தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து முடித்து, பட்டம், பட்டயம், மற்றும் ஐடிஐகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இத்திட்டத்துக்கு ஆதார் எண் மிகவும் அவசியமாகிறது. பயனாளிகள் கட்டாயம் ஆதார் எண் வைத்துள்ளவராக இருத்தல் வேண்டும்.
கல்வி நிறுவனங்கள், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் பதிவு செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.