புதுடெல்லி: இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா. 3,850 டன் எடையுள்ள இந்தக் கப்பல்கடந்த 2000-வது ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. பழுதுபார்க்கும் பணிக்காக மும்பை கடற்படைதளத்தில் நிறுத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பழுதுபார்க்கும் பணியின் போது இந்தக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயை அணைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டனர். அதன்பின்பு கப்பலில் மீண்டும் தீ பரவாமல் இருப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தில் கடற்படை வீரர் ஒருவரைக் காணவில்லை. அவரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தீ விபத்து காரணமாக போர்க்கப்பலில் ஏற்பட்ட சேதம் குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி விளக்கினார்.
தீயை அணைப்பதற்காக கப்பலில் பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீர், கப்பலுக்குள் வெள்ளம் போல் தேங்கியிருந்தது. இதனால் போர்க்கப்பல் கடந்த திங்கள் கிழமை மாலை திடீரென இடது புறமாகச் சாய்ந்தது. இதையடுத்து ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க்கப்பலில் ஏற்பட்ட சேதத்தை கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ்கே. திரிபாதி நேற்று பார்வையிட்டார். அந்தக் கப்பலின் அதிகாரிகள் மற்றும் வீரர்களை சந்தித்து பேசிய அட்மிரல் திரிபாதி, கப்பலை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் திட்டம் குறித்து ஆலோசித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரியர் அட்மிரல் தலைமையில் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் கப்பலை மீட்கும் பணி மிகவும் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.
2016-ல் பெத்வா போர்க்கப்பல்: கடந்த 2016-ம் ஆண்டு மும்பை கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் பெத்வா போர்க்கப்பல் கவிழ்ந்தது. இது சர்வதேச மீட்புக் குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டது. இதை செயல்பாட்டுக்குக் கொண்டு வரநீண்ட காலம் ஆனது. இதேபோல் ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பல் கடந்த 2011-ம் ஆண்டு மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கப்பல் பெரும் பொருட்செலவில் மீட்கப்பட்டது. ஆனாலும்,செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லாததால், அந்தக் கப்பல் கடற்படை பணியிலிருந்து விடுவிக்கப் பட்டது.