மைக்ரோசாப்ட் ஊழியர் எனக்கூறி அமெரிக்க பெண்ணிடம் பணமோசடி செய்த இந்தியர் கைது

வாஷிங்டன்,

அமெரிக்காவைச் சேர்ந்த லிசா ரோத் என்ற பெண்ணின் கணினியை கடந்த ஆண்டு ஜூலை 4-ந்தேதி மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்னர் அந்த கணினியில் தோன்றிய அலைபேசி எண்ணிற்கு லிசா தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய நபர், தன்னை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அந்த நபர் லிசாவிடம் அவரது வங்கி கணக்கி இருந்து 4 லட்சம் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.3.3 கோடி) பணத்தை கிரிப்டோகரன்சி வாலட்டிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.

இதன் பிறகு சில நாட்கள் கழித்து லிசாவின் கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரிடம் லிசா புகார் அளித்தார். இதையடுத்து அமெரிக்க போலீசார் நடத்திய விசாரணையில், லிசா ரோத்திடம் மோசடியில் ஈடுபட்டது இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டெல்லியில் வசிக்கும் லக்ஷேய் விஜ் என்ற நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணயில், அமெரிக்க பெண் லிசா ரோத்தின் கணக்கில் இருந்து கிடைத்த பணத்தை பல்வேறு போலி கணக்குகளுக்கு மாற்றி, பின்னர் அவற்றை சூதாட்ட செயலிகளில் முதலீடு செய்வதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்துள்ளனர். மேலும் போலி கணக்குகளை வைத்திருந்தவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட லக்ஷேய் விஜ், டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.