வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் வங்கதேச அரசு மிகச் சிறந்த ஒத்துழைப்பை வழங்கியது. எல்லையை கடந்து வருவதாக இருந்தாலும் சரி, விமான நிலையம் சென்று விமானத்தின் மூலமாக வருவதாக இருந்தாலும் சரி இந்தியர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான நடவடிக்கைகளை வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் சிறப்பாக மேற்கொண்டது.

வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்காக 24/7 இயங்கக்கூடிய உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. வங்கதேசம் நமது அண்டை நாடு. நமது நட்பு நாடு. அங்கு நிகழும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கிறது. நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.



வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. வங்க தேசத்தில் மருத்துவம் படிக்க சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 49 மாணவ, மாணவிகள் கடந்த 21ம் தேதி பாதுகாப்பாக ஊர் திரும்பினர்.

வங்கதேசத்தில் கல்வி, அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 93 சதவீதம் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மாணவர்கள் கலவரம் ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.