மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 390 நாட்களுக்கு பிறகு மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 33,040 கன அடியாக இருந்த நிலையில், இன்று மாலை விநாடிக்கு 28,856 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனினும், அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவை விட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 89.31 அடியாக இருந்த நிலையில், இன்று மாலை 90.01 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 51.86 டிஎம்சியில் இருந்து 52.66 டிஎம்சியாக உயர்ந்தது.
கடந்தாண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி, அணையின் நீர்மட்டம் 90.45 அடியாகவும், நீர் இருப்பு 53.16 டிஎம்சியாகவும், நீர்வரத்து 145 கன அடியாகவும் இருந்தது. தற்போது, 390 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.
இது குறித்து நம்மிடம் பேசிய நீர்வளத்துறை அதிகாரிகள், “கர்நாடகாவில் பெய்து வரும் மழையால், கேஆர்எஸ் அணை முழுமையாக நிரம்பியதையடுத்து, அணையில் இருந்த உபரிநீர் திறப்பு 70 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளவை எட்ட வாய்ப்புள்ளது” என அதிகாரிகள் கூறினர்.