நீரிழிவு நோய்க்கான புது மருந்தினை சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிடுகிறது `ஃபார்எவர் கியூர் பார்மா’ என்கிற மருந்து நிறுவனம். அதற்கான மாதிரிச் சோதனையில் லஞ்சம் கொடுத்து போலியாக அதிக நபர்களிடம் மாதிரி எடுத்ததாகக் கணக்குக் காட்டுகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் பார்மசியின் ஆய்வகத்தை குர்சிமரத் கவுர் (அன்ஷுல் சௌகான்) என்ற ஆய்வாளர் முன்னறிவிப்பின்றி ஆய்வு செய்ய வர, மர்ம நபர் ஒருவன் ஒரு ஃபைலை எடுத்துக்கொண்டு ஓடுகிறான். இந்த சேஸிங்கில் ஃபைலைச் சாக்கடையில் தூக்கி எறிகிறான். ஒருவழியாக அதைக் குப்பைக் கிடங்கிலிருந்து கண்டெடுக்கிறார் பத்திரிகையாளர் நூர் (அக்ஷத் சௌகான்).
அந்த ஃபைலில் இருக்கும் தகவல்கள் என்ன, புதிதாக மருந்து கட்டுப்பாட்டுத் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு வந்துள்ள மருத்துவர் பிரகாஷ் சௌகான் (ரிதேஷ் தேஷ்முக்) இந்த விஷயத்தை எப்படிக் கையாள்கிறார் என்பதை எட்டு எபிசோடுகளாக, ஒரு கிரைம் திரில்லராக தந்திருக்கிறது ஜியோ சினிமாவில் வெளியாகியிருக்கும் ‘பில்’ வெப் தொடர்.
முதல் வரிசையில் இருக்கைகள் காலியாக இருந்தாலும் கூச்சப்பட்டுக் கொண்டு இரண்டாம் வரிசையில் அமரும் மருத்துவ அதிகாரியாக ரிதேஷ் தேஷ்முக் அப்பாவியான நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அதிலும் நேர்மையான மருத்துவ அதிகாரியாகத் தன்னை மீறி நடக்கும் விஷயங்களால் தடுமாறும் இடத்தில், நடிப்பில் அத்தனை தெளிவு. அவருக்கு நேரெதிராக லாபநோக்கத்தோடு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளியாகப் பவன் மால்கோத்ரா குரூரத்தில் மிரட்டுகிறார். மிகவும் கணிக்கும்படியாக திரைக்கதை இருந்த போதிலும் இவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் வரும் இடங்கள் அனைத்தும் அச்சுறுத்துகின்றன.
இன்வெஸ்டிக்கெட்டிவ் ஜர்னலிஸ்ட் ஆகவேண்டும் என்று சினிமா ஜார்னலிஸ்ட்டாக முதலாளியிடம் மாட்டிக்கொண்டிருக்கும் அக்ஷத் சவுகான், மந்தமாக நடக்கும் விசாரணைக் காட்சிகளைச் சற்றே கலகலப்பாக மாற்ற முயன்றிருக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட முற்போக்கு வசனத்துக்காக வைக்கப்பட்ட பெண்கள் புல்லட் ஓட்டும் காட்சியில் தன் மிடுக்கான மாடுலேஷனால் மிரட்டியிருக்கிறார்.
கேமரா மற்றும் லைட்டிங் சில இடங்களில் வேலை செய்தாலும் லோ பட்ஜெட் என்பது கலரிங் முதற்கொண்டு பல இடங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆராய்ச்சி கூடங்கள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் கலை இயக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மெதுவாக நகர்கிற காட்சிகளின் வேகத்தைக் கூட்டாமல் படத்தொகுப்பாளரும், அழுத்தமான காட்சிகளில் வேண்டிய தாக்கத்தைத் தராமல் இசையமைப்பாளரும் ஏமாற்றமளிக்கிறார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழில் குறித்த குற்றங்களை விவரிக்கும் வசனங்கள் எல்லாம் காய்கறி வியாபாரம் போலச் சாதாரணமாக எழுதப்பட்டிருப்பதும் இந்தத் தொடரின் மைனஸ்.
அதே சமயம் மருந்து நிறுவனங்களின் அலட்சியத்தின் காரணமாகப் பல நிறுவனங்கள் சீல் வைத்து மூடப்படும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இந்தத் தொடர் வந்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பழைய நம்பியார் vs எம்.ஜி.ஆர் என்ற பாணியிலான கதையாடல் என்றாலும் அதை நிகழ்காலத்தின் மிக முக்கிய பிரச்னைகளோடு கலந்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும் வசனங்கள் பிரசங்க சொற்பொழிவைப் போலக் கஷாயத்தின் கடுப்பை கிளப்புவது தொடர் நெடுகிலும் பெரும் சோதனை. மிகவும் லாஜிக் கேள்விகளோடு ஆரம்பிக்கும் தொடர் பின்பு “லாஜிக் எல்லாம் பாக்காதீங்க, பிரச்னையை மட்டும் பாருங்க” என டேக் டைவர்ஷன் எடுக்கிறது. இந்த லாஜிக் ஓட்டைகளைப் பூசி அடைப்பதற்காக, உணர்வுபூர்வமான சென்டிமெண்ட் காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் மண்டை மேலே இருந்த கொண்டையை மறந்த கதையாக அந்தக் காட்சிகளும் பல்லிளிக்கின்றன.
தொடக்கத்திலேயே பல கதாபாத்திரங்கள், பல கதைக்களங்கள் ஆகியவை ஒரே நேரத்தில் வருவது பார்வையாளர்களுக்குச் சற்று குழப்பத்தைத் தந்தாலும், அடுத்து என்ன என்கிற சுவாரஸ்ய அனுபவத்தைத் தந்து ரசிக்கவே வைக்கின்றன முதல் இரண்டு எபிசோடுகள். ஆனால் அதற்குப் பின்னர் வருகின்ற எபிசோடுகள் “அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்” என்பது போல “தரமற்ற மருந்து தயாரிக்கிறார்கள்” என்ற கருத்தையே மீண்டும் மீண்டும் பறைசாற்றுகின்றன. ‘நீரிழிவு நோய், டெங்கு காய்ச்சல், கேன்சர்’ என ‘ஒரே மாத்திரை தலைவலி நீங்கிவிடும்’ என்பது போல “ஒரே காட்சி தொகுப்புதான், நோய் மட்டும்தான் வேறு வேறு” என்று ரிப்பீட் அடிக்கிறது திரைக்கதை. ஒரு எல்லைக்கு மேல் தேவயாணி பஞ்சதந்திரம் படத்தில் சொல்வது போல “எவ்ளோ பெரிய மாத்திரை” என்று கதறும் நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
ஒரு பாலினைக் காய்த்து எடுப்பதற்கு பத்து நிமிடம் மட்டுமே போதும், அதைத் தாண்டி பொறுமையாகக் கொதிக்கவிட்டால் என்ன நடக்குமோ அதைத்தான் காட்சிகளின் வேகம் நமக்கு உணர்த்துகிறது. நியாயப்படி மூன்றாவது எபிசோடிலேயே வர வேண்டிய கோர்ட் ரூம் டிராமா ஐந்தாவது எபிசோடில்தான் எட்டிப் பார்க்கிறது. அதில் ஏற்படும் வாதங்களில் நம்மைச் சற்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள் என்றாலும் மீண்டும் நம்பகத்தன்மை இல்லாத காட்சிகள், ரிப்பீட் காட்சிகள் என X2 பட்டனை அழுத்த வைக்கிறார்கள். இதுவரை பார்த்திராத உலகம் என்று ஆர்வத்தோடு ஆரம்பித்த தொடர், அதர பழைய கிளைமாக்ஸோடு முடிந்து நம்மை அலறவிட்டிருக்கிறது.
மொத்தத்தில் முக்கியமான சமூக பிரச்னையைக் கையில் எடுத்து அதன் இருண்ட பக்கங்களைக் காட்டுவதாக ஆரம்பித்த தொடர், நம்பகத்தன்மையில்லாத காட்சிகள், லாஜிக் ஓட்டைகள் என்று வேலைசெய்யாத மருந்தாக முடிந்து போகிறது.