அந்த இந்திய வீரரை பார்த்து மொத்த பாகிஸ்தான் அணியே பயப்படும் – பாசித் அலி

லாகூர்,

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கர், கிரிக்கெட்டில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் அவர், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது வாசிம் அக்ரம் கிளென் மெக்ராத், அக்தர், போன்ற மகத்தான பவுலர்களை எதிர்கொண்டார். அந்த வகையில் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த அவர் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்.

குறிப்பாக சச்சின் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்ததை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்தளவுக்கு எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர் 30000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து 100 சதங்கள் விளாசி இந்தியாவின் பல மகத்தான வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சச்சின் நன்றாக விளையாடும் போட்டிகளில் இந்தியா எளிதாக வெல்வது வழக்கமாகும். அதுவே சச்சின் அவுட்டானால் இந்தியாவை எதிரணிகள் எளிதாக தோற்கடித்து விடும். அதனால் அந்த கால கட்டங்களில் இந்தியாவை வீழ்த்த வேண்டுமெனில் முதலில் சச்சினை அவுட்டாக்க வேண்டும் என்று எதிரணிகள் திட்டமிடுவார்கள்.

இந்நிலையில் அதையே தங்களுடைய கேப்டன் வாசிம் அக்ரமும் அடிக்கடி சொல்வார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். குறிப்பாக முகமது அசாருதீன் போன்ற மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் சச்சினை பார்த்து மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பாசித் அலி கூறியுள்ளது பின்வருமாறு:- “சச்சின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனவே அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை நான் பார்ப்பேன். இந்தியாவுக்கு எதிராக வெல்ல வேண்டுமெனில் அதற்கு சச்சினை அவுட்டாக்க வேண்டும் என வாசிம் அக்ரம் எங்களுடைய அணி மீட்டிங்கிலும், சாப்பிடும் இடத்திலும், வலைப்பயிற்சியிலும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதேபோல சச்சினை விரைவில் அவுட்டாக்கியதும் பாகிஸ்தான் வென்று விடும். இந்திய அணியில் மகத்தான அசாருதீன் கூட இருந்தார். ஆனால் நாங்கள் அசாருதீனுக்காக பயப்பட்டதில்லை. இருப்பினும் கண்டிப்பாக சச்சின் இருப்பது எங்களை பயமுறுத்தும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.