‘அமைதியாக இருக்கப்போவதில்லை’ – காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன?

வாஷிங்டன்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து காசா பிரச்சினையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ், “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் நிலவும் மனித துயரத்தின் வீச்சு பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இதில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை” என்று கூறினார்.

கமலா இதனைத் தெரிவித்தபோது அவர் குரலில் இருந்த உறுதியும், கெடுபிடியும் இஸ்ரேல் பிரச்சினையில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு பைடனுடையதிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கும் என்ற விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் போருக்கு பைடன் அரசு முழு ஆதரவு தெரிவித்து வருகிறது.



இஸ்ரேல் பிரச்சினை குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இருதரப்புமே சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.” என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணம் கவனம் பெற்றுள்ளது. நெதன்யாகு வருகையை ஒட்டி வெள்ளை மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார். அப்போது ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள், போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் நாடு கொண்டுவரப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர். இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்துவருகிறது. காசா பேரழிவை சந்தித்து வருகிறது. ஹமாஸ் அழிக்கப்படும்வரை போர் தொடரும் என்ற அறைகூவலுடன் இஸ்ரேல் வான்வழி, தரைவழி என கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் காசா உருக்குலைந்துவிட்டது. இதுவரை 25000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள். இதனாலேயே ஐ.நா., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், உலக நாடுகள் பலவும் இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.