லக்னோ
கடந்த 2018-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.இந்த வழக்கு தொடர்பாக இன்று கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜரான நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 12ம் தேதி நடைபெறும் எனவும் அப்போது ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்து ராகுல் காந்தி, பின்னர் கார் மூலம் சுல்தான்பூர் கோர்ட்டுக்கு வந்தடைந்தார்.