மும்பை,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஐ.சி.சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.
இதனிடையே தற்போது வசதிகளும் பாதுகாப்பும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாகக் கலக்காமல் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டுமென வாசிம் அக்ரம் கேட்டுக் கொண்டார். அதேபோல எங்கள் நாட்டில் நிறைய ரசிகர்கள் இருப்பதால் பாகிஸ்தானுக்கு வந்து விராட் கோலி விளையாடினால் இந்தியாவை மறந்து விடுவார் என்று ஷாஹித் அப்ரிடி அழைப்பு விடுத்தார். அது போக சோயப் மாலிக், யூனிஸ் கான் உள்ளிட்ட நிறைய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்களும் வீரர்களும் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் தினம்தோறும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எனவே வீரர்களின் பாதுகாப்பை விட இந்தியாவுக்கு வேறு எதுவும் முக்கியமில்லை என்று அவர் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி ஹர்பஜன் பேசியது பின்வருமாறு:- “இந்திய அணி ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு கவலையளிக்கக் கூடிய விஷயங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. எனவே இந்திய அணி அங்கே செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்று நான் கருதவில்லை. அதனால் பிசிசிஐ தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு மிகவும் சரியானது. நமது வீரர்களின் பாதுகாப்பை விட வேறு எதுவும் முக்கியமில்லை. நான் பிசிசிஐ நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்று கூறினார்.