புதுடெல்லி: ஹரியாணாவின் யமுனா நகர் மதுக்கடையில் மதுவை வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ஓர் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிய இரண்டு காவடிகளை போலீஸார் தேடுகின்றனர்.
டெல்லியை ஒட்டியுள்ள மாநிலமான ஹரியாணாவில் யமுனா நகர் உள்ளது. இதன் ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு நேற்று (ஜூலை 25) நள்ளிரவு கன்வர் யாத்திரை மேற்கொண்ட இரண்டு காவடிகள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கான வாடிக்கையாளர் சேவையை கடை பணியாளரான ஓர் இளைஞர் அளித்துள்ளார். இதில், மதுவை காசு கொடுத்து பெறுவதில் காவடிகளுடன் அந்தக் கடை இளைஞருக்கு வாய் தகராறு உருவாகி உள்ளது.
அந்த இளைஞர் மற்றும் இரு காவடிகளுக்கு இடையே தகராறு முற்றி கைகலப்பாக மாற, அதிகக் கோபம் அடைந்த இரண்டு காவடிகளும் தம்மிடமிருந்த கத்தியால் அந்த இளைஞரின் முன்பக்கத்தில் குத்தினர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் அந்த இளைஞர் மயங்கி சரிந்ததுடன் அவரது உயிரும் பிரிந்துள்ளது. அதேநேரம் காவடிகள் சம்பவத்தின் விபரீதத்தை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தகவல் அறிந்த யமுனா நகர் போலீஸார் மதுக்கடைக்கு விரைந்து வந்து விசாரணையில் இறங்கினர்.
மதுக்கடையில் பணியாற்றும் மற்றவர்களுடனும் விசாரணை நடத்தினர். கொலையான இளைஞரின் விலாசத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இறந்த இளைஞர் உடல் யமுனா நகர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் மதுக்கடையின் முன் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாகக் சொல்லப்படுகிறது. இதனால், அந்த கேமராவின் பதிவான காட்சிகளை விசாரணைக்காக போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து யமுனா நகர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜெக்தீஷ் சந்திரா கூறும்போது, ‘‘மதுக்கடைக்கு வெளியே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், ஹரியாணாவை சேர்ந்தவர்களாகக் கருதப்படும் காவடிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.
தப்பி ஓடிய காவடிகளை சிசிடிவி பதிவுகள் மூலம் விரைந்து பிடிக்க போலீஸார் தயாராகி வருகின்றனர். ஹரியாணாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலையால், சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறை உயர் அதிகாரிகளும் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநிலங்களில் ஜூலை 22 முதல் துவங்கிய ஷ்ரவன் மாதத்தில் காவடிகள் அருகிலுள்ள சிவத் தலங்களுக்கு சென்று புனித நீரை கொண்டு வருவது வழக்கம். இதற்காக வேண்டுதலுடன் சென்று வரும் பக்தர்கள் இடையே இதுபோல் நடந்த விபரீத சம்பவம் வட இந்தியா முழுவதும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.