திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே வேனில் அவரது மனைவி லலிதாவும் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை சேமலையப்பன் வேனில் அழைத்துச் சென்றுள்ளார்.
வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் சேமலையப்பனுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, சேமலையப்பன் ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார். அவர் மயங்கியதைக் கண்ட மனைவி லலிதா மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் வேனில் மயங்கி விழுந்த சேமலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வேன் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழும் நிலையிலும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரை விட்ட ஓட்டுநர் சேமலையப்பனின் உடலுக்குப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சேமலையப்பனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.